உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெல்டாகாரன் என வசனம் பேசினால் போதாது: ஸ்டாலினை சாடிய இ.பி.எஸ்.,

டெல்டாகாரன் என வசனம் பேசினால் போதாது: ஸ்டாலினை சாடிய இ.பி.எஸ்.,

சென்னை: 'நான் ஒரு டெல்டாகாரன் என்று தேர்தல் நேரத்தில் வசனம் பேசினால் மட்டும் போதாது. விவசாயிகள் கஷ்டப்படும் இந்த கோடை காலத்தில் லாரி மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை

போதிய மழை இல்லாமல், குழந்தைகள் போல் பார்த்து, பார்த்து, தாங்கள் பயிரிட்டு, வளர்ந்து, பலன் தர வேண்டிய நேரத்தில், மா மரங்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கும் விவசாயிகளின் வேதனையைப் போக்க வேண்டியது அரசின் கடமை.

டெல்டாகாரன்

ஏற்கனவே, இப்பகுதி விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், இன்று வரை திமுக அரசு எந்த உதவியும் செய்யவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 'நானும் ஒரு டெல்டாகாரன்' என்று தேர்தல் நேரத்தில் வசனம் பேசினால் மட்டும் போதாது.

வறட்சி

விவசாயிகள் கஷ்டப்படும் இந்த கோடை காலத்தில், வறட்சியால் வாடும் மா மரங்களைக் காத்திட, லாரிகள் மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து, விளைந்த மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெற்றுத் தர வேண்டும் என திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவரின் அட்டகாசத்தால் மருத்துவப் பணியாளர்களும் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளானதாக வரும் செய்தி கவலையளிக்கின்றது. போதைப்பொருள் புழக்கம் குறித்த எனது தொடர் எச்சரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் இந்த திமுக அரசு செயலற்று இருந்ததன் விளைவே, தற்போது தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டால், குற்றச் செயல்களும் பொதுமக்களுக்கான இடையூறுகளும் அதிகரித்து வருகிறது. சில நாட்களாக போதைப் பொருட்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்த செய்திகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ