உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேலூருக்கு ஒரு நீதி? கடலூருக்கு ஒரு நீதியா? டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் முதல்வருக்கு அன்புமணி சரமாரி கேள்வி!

மேலூருக்கு ஒரு நீதி? கடலூருக்கு ஒரு நீதியா? டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் முதல்வருக்கு அன்புமணி சரமாரி கேள்வி!

சென்னை: 'டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆவேசம் காட்டும் முதல்வர், என்.எல்.சி., நிலக்கரி சுரங்க விவகாரத்தில் வேடிக்கை பார்ப்பது ஏன்? மேலூருக்கு ஒரு நீதி? கடலூருக்கு ஒரு நீதியா?' என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டேன்; அவ்வாறு அமைக்கும் நிலை வந்தால் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருக்கிறார். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடும் மக்களின் உணர்வுகளை மதித்து இத்தகைய நிலைப்பாட்டை முதல்வர் எடுத்தது சரியானது தான். ஆனால், கடலூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்.எல்.சி சுரங்கத்திற்கு எதிராக இதே உணர்வை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படுத்தாதது கடலூர் மக்களுக்கு அவர் இழைக்கும் துரோகத்தையும், இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தியுள்ளன.நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக பல்லாயிரக்கணக்கான மண்ணின் மைந்தர்களின் நிலங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட போது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஏன்? அதுமட்டுமின்றி, மத்திய அரசை எதிர்ப்பது தான் தமது முதன்மைப் பணி என்று கூறிக் கொண்டிருக்கும் ஸ்டாலின், நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மட்டும் என்.எல்.சி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டு கதிர் விடும் நிலையில் இருந்த நெற்பயிர்களை வயலில் எந்திரங்களை இறக்கி, கருவுற்ற தாயை கொலை செய்வதைப் போன்று, அழித்தது ஏன்? என்பன தான்.கடலூர் மாவட்ட மக்கள் மீது அவருக்கு அப்படியென்ன வன்மம்? கடலூர் மாவட்டமும் அவரது அதிகார வரம்புக்குள் தான் வருகிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் மறந்து விட்டாரா? தமிழகத்தில் அனைத்து நிலம் எடுப்பு முயற்சிகளையும் விட முதன் முதலில் எதிர்க்கப்பட வேண்டியது என்.எல்.சி சுரங்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் திட்டம் தான். அங்கு தான் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமான கொடுக்கக்கூடிய, ஏக்கருக்கு ரூ.2 கோடி விலை பெறக் கூடிய நிலங்கள் என்.எல்.சிக்காக அடிமாட்டு விலைக்கு பறிக்கப்படுகின்றன; அங்கு தான் 60 ஆண்டுகளுக்கு முன் நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களுக்கு இன்று வரை வேலை வழங்கப்படவில்லை.சென்னையும், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களும் கடுமையான மழையால் பாதிக்கப்பட்ட போது, அங்குள்ள மக்களுக்கு ரூ.6,000 வீதம் நிவாரண நிதி வழங்கிய தமிழக அரசு, இப்போது கடுமையான மழை, சாத்தனூர் அணையை முன்னறிவிப்பின்றி திறந்து விட்டதால் ஏற்பட்ட வெள்ளம் ஆகிய இரு வகையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள பாவப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு ரூ.2,000 மட்டுமே நிவாரண நிதி வழங்குகிறார். இது என்ன அநீதி? ஒரு மாநிலத்தின் முதல்வர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால், நானும் டெல்டாக்காரன், மேலூருக்கு சிக்கல் என்றால் பதவி விலகுவேன் என்று முழங்கும் முதல்வர், வட மாவட்டங்கள் என்றால் மட்டும் வன்மத்துடன் நடந்து கொள்வது சரியல்ல. அனைவரையும் ஒன்றாய் பார்க்கும் மனநிலையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்; அரிட்டாப் பட்டியை அழிக்கும் டங்ஸ்டன் சுரங்கமாக இருந்தாலும், கடலூர் மாவட்டத்தை சீரழித்து வரும் என்.எல்.சி நிறுவனமாக இருந்தாலும் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். என்.எல்.சிக்காக கையகப்படுத்தப் பட்ட நிலங்கள் முழுவதையும் மீண்டும் உழவர்களுக்கே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை