சென்னை: கோவையில், கொல்கட்டா வாலிபர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரிக்க, என்.ஐ.ஏ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில், மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவை சேர்ந்த சுராஜ், 23, என்ற வாலிபரை, மர்ம நபர்கள் அடித்து கொன்றனர். தீயாக பரவின கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்ததால், இக்கொலை குறித்த தகவல்களை, போலீசார் மூடி மறைக்க முயற்சி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், இக்கொலைக்கான பின்னணி குறித்து, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து அந்த அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வடமாநில வாலிபர் ஒருவரை, சிறார்கள் கொடூரமாக கத்தியால் வெட்டும் காட்சிகள், சமூக வலைதளங்களில் தீயாக பரவின. விசாரணை இச்சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், கோவையில் மேற்கு வங்க வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இக்கொலையில் ஈடுபட்டவர்கள், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நபரின் பெயரை கேட்டு, தீவிரமாக தாக்கி உள்ளனர். பெயரை கேட்டதும் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, கொலை செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னரே, இக்கொலை வழக்கில் கைதான நபர்களும், உயிரிழந்த நபரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கைதானவர்களில் ஒருவர் ஊர்காவல் படையில் இருப்பதாகவும் தெரியவருகிறது. வாலிபரை கொலை செய்த நபர்கள் மற்றும் அவர்களின் பின்னணி குறித்து, தீவிரமாக விசாரிக்க வேண்டி உள்ளது. இதனால், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். அவர்களின் உத்தரவின்படி, நாங்களும் விசாரணையை துவக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.