கும்பகோணம் - சீர்காழி நான்கு வழி சாலை திட்டத்தை நிறைவேற்ற ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை:கும்பகோணம் - சீர்காழி நான்குவழிச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறையை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர், தாக்கல் செய்த மனு:தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்கள், காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ளன. மண்ணின் தன்மையால், இங்குள்ள சாலைகள் அடிக்கடி சேதமடைகின்றன. சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் தாலுகாக்களை இணைக்கும் சாலைகள் குறுகலாக உள்ளன. புதிய நான்குவழிச் சாலை அமைக்கும்படி, அப்போதைய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம், மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் இடையே, 51 கி.மீ., துாரத்துக்கு, 752 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிச் சாலை அமைப்பது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான திட்ட அறிக்கை, சாத்தியக்கூறு அறிக்கை, 2019ல் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சாலைக்கு, சுற்றுச்சூழல் ஒப்புதல் அவசியமில்லை. ஐந்து ஆண்டுகள் ஆகியும், சாலை அமைக்கும் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, சூரியனார்கோவில், திருமணஞ்சேரி, மயிலாடுதுறையை இணைக்கும் விதமாக, கும்பகோணம் - சீர்காழி நான்குவழிச் சாலை திட்டத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். உடனடியாக இந்த சாலை திட்டத்தை நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி எம்.ஜோதிராமன் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் எஸ்.சத்யராஜ் ஆஜரானார். மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் ஆஜராகி, மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் கோரினார். இதையடுத்து, விசாரணையை, எட்டு வாரங்களுக்கு முதல் அமர்வு தள்ளி வைத்தது.