உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பராசக்தி படத்திற்கு தடை கோரி வழக்கு

 பராசக்தி படத்திற்கு தடை கோரி வழக்கு

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள, பராசக்தி படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இப்படம், ஜன., 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனது 'செம்மொழி' என்ற கதையை திருடி, இப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், திரைப்பட இணை இயக்குநர் ராஜேந்திரன், வழக்கு தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த, 1965ல் நடந்த ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரை மையமாக வைத்து, 'செம்மொழி' என்ற பெயரில் கதை எழுதி, 2010ல் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். மறைந்த கருணாநிதி எழுதிய நாவலை மையாக வைத்து எடுக்கப்பட்ட, பெண் சிங்கம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியபோது, இக்கதையை கருணாநிதியிடம் தெரிவித்தேன்; அவரும் என்னை பாராட்டினார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்த கதையை, பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்தேன். தயாரிப்பாளர் சேலம் தனசேகரன், என் கதையை நடிகர் சூர்யாவிடம் கொடுக்க, அவர் அதை இயக்குநர் சுதா கொங்கராவிடம் கொடுத்துள்ளார். பின், செம்மொழி கதையை மையமாக வைத்து, புறநானுாறு என்ற பெயரில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அப்படம் கைவிடப்பட்டு, தற்போது பராசக்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. என் கதையை திருடி, பராசக்தி படம் எடுக்கப்பட்டு உள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், 2025 ஜன., மாதம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பராசக்தி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: இரு கதைகளும் ஒன்று தானா, இல்லையா என்பதை முழுமையாக ஆய்வு செய்வதுடன், இரு தரப்பிலும் விசாரித்து, தென்னிந்திய திரைப்பட எழுந்தாளர் சங்கம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், மனுவுக்கு பட இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர், ஜன., 2ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை