| ADDED : டிச 03, 2025 05:55 AM
சென்னை: பா.ஜ., மத்திய இணை அமைச்சர் முருகன் வெளியிட்ட அறிக்கை: கார்த்திகையில் தீபம் ஏற்றி வழிபடுவது பழந்தமிழர் மரபு. பருவமழை குறைந்து, குளிர் காலம் துவங்குவதன் அறிகுறியாக, பன்னெடுங்காலமாக தமிழக மக்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். சிவபெருமான், அக்னி ஜோதியாக தேவர்களுக்கு காட்சியளித்த இடம், திருவண்ணாமலை. அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதீகப்படி, வடக்கே திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தை காண, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தினத்தில் லட்சக்கணக்கான மக்கள், திருவண்ணாமலையில் திரள்கின்றனர். அதேபோல, தெற்கே குமரன் குடியிருக்கும் குன்றான திருப்பரங்குன்றத்திலும், இந்த ஆண்டு தீபத்துாணில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. தடைகளை தாண்டி, முருக பக்தர்களின் நீண்ட போராட்டத்திற்கு பின், பாரம்பரிய முறையில், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த, நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. கார்த்திகை தீப திருநாளான இன்று, இல்லங்கள் தோறும் தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவோம். தமிழகத்தை சூழ்ந்துள்ள அரசியல் இருள் விலகி புத்தொளி பிறக்க, அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மையிடம் வேண்டுவோம். அதேபோல, பல ஆண்டுகளுக்கு பின் திருப்பரங்குன்றம் தீபத்துாணியில் மகா தீபம் ஏற்றிடுவோம். அடுத்த ஆண்டு தமிழகத்தில் மக்கள் விரும்பும் அரசு அமைய, குன்றுதோறும் குடியிருக்கும் குமரனிடம் பிரார்த்தனை செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.