உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் 2027ல் நிறைவுபெறும்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் 2027ல் நிறைவுபெறும்

ராமநாதபுரம் : மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2027 ல் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை 2015 பிப்.28ல் அறிவிக்கப்பட்டது. 2018 ஜூன் 18ல் மதுரை தோப்பூரில் இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. 2018 டிச.17ல் மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியது. 2019 ஜன. 27ல் எய்ம்ஸ் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 2019 நவ.25ல் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கப்பட்டது. 2019 நவ.3ல் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசிடம் இடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடர்பான கடன் ஒப்பந்தம் 2021 மார்ச் 26ல் கையெழுத்தானது.

கட்டுமான பணிகள் 2027ல் நிறைவு

இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பொது தகவல் அலுவலர் பதில் அளித்துள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்விசார் கட்டடம், நர்சிங் மாணவர்கள் தங்கும் விடுதிகள், உணவுக் கூடம், வெளிநோயாளிகள் பிரிவு, சேவைப்பிரிவு ஆகியவற்றின் கட்டுமான பணி நடக்கிறது. ரூ.1118.35 கோடிக்கு கட்டுமான பணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2024 மே 22ல் கட்டுமானம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு ரூ.2021.51 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு 33 மாதங்களில் 2027ல் பணிகள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 927 சதுர மீட்டரில் மருத்துவமனை கட்டடங்கள், மருத்துவக்கல்லுாரி, விடுதி, ஆசிரியர் குடியிருப்புகள், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள் கட்டப்படவுள்ளன.தற்காலிக கட்டடங்களாக திட்ட அலுவலகம், சேமிப்பு கிடங்குகள், கான்கிரீட் தயாரிப்பு ஆலை, பாதுகாப்பு சம்பந்தமான கட்டடங்கள் அமைக்கும் பணி நடக்கிறது என கூறியுள்ளார்.பாண்டியராஜா கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் குறித்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். உரிய நேரத்தில் ஜைக்கா நிறுவனத்திடம் இருந்து நிதியை பெற்றும் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய திட்ட நிதியையும் பெற்றும் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை