உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ கல்லுாரி கட்டண விவகாரம்: நிர்ணய குழுவுக்கு ஐகோர்ட் அறிவுரை

மருத்துவ கல்லுாரி கட்டண விவகாரம்: நிர்ணய குழுவுக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை:'மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பது, கல்வி நிறுவனங்களை பாதுகாப்பது போன்றவற்றை கருத்தில் கொண்டு, கட்டணம் நிர்ணயம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்' என, கட்டண நிர்ணய குழுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுக்கு, 2022 - 23, 2023 - 24 மற்றும், 2024 - 25ம் கல்வியாண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்து, கட்டண நிர்ணய குழு உத்தரவு பிறப்பித்தது. இக்குழு, 2022 அக்டோபரில் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு சுயநிதி மருத்துவ கல்லுாரிகள் சங்கத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜராகி, ''உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்லுாரியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகளை கருத்தில் கொள்ளும் வகையில் திட்டத்தை சமர்ப்பிக்க, அந்தந்த நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது. இருப்பினும், அந்த அளவு கோல்கள் முழுமையாக கடைப்பிடிக்கப்படாததால், மனுதாரரின் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள கல்லுாரிகள் நிதி இழப்பால் பாதிக்கப்பட்டு உள்ளன,'' என்றார்.தமிழக அரசு தரப்பில், 'கல்லுாரிகள் சந்திக்கும் செலவுகளின் அடிப்படையில் மட்டுமே, கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மருத்துவ கல்லுாரிகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்கும் போது, நடைமுறையில் உள்ள விலைவாசி மற்றும் செலவுகளை கருத்தில் கொண்டு நிர்ணயிக்க வேண்டும்.மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையிலும், கல்வி நிறுவனங்களை பாதுகாக்கும் வகையிலும், கட்டணங்கள் நிர்ணைப்பதை குழு உறுதி செய்ய வேண்டும். கல்லுாரிகள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் கட்டணங்களை நிர்ணயித்து, கட்டண நிர்ணய குழு முடிவை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி