அரசு டிரைவர், கண்டக்டர் பணிக்கு டிப்போவில் மருத்துவ பரிசோதனை தேர்வர்கள் எதிர்பார்ப்பு
விருதுநகர்: அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணிக்கான மருத்துவ தகுதிச்சான்றிதழ் பெற அரசு மருத்துவமனைகளில் தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இதை தவிர்க்க அந்தந்த மாவட்ட தலைமை அரசு டிப்போவில் அரசு மருத்துவக்கல்லுாரிகளுடன் இணைந்து தேர்வர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி தகுதிச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகள் முடிந்து தற்போது நேர்முகத்தேர்விற்கான அழைப்பு கடிதங்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வு செப்., 24ல் துவங்கி இம்மாதம் இறுதி வரை நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதத்தில் பங்கேற்கும் நாள், நேரம், மருத்துவ தகுதிச்சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவ தகுதிச்சான்றிதழில் உயரம் 165 செ.மீ., எடை குறைந்தது 50 கிலோ இருப்பதற்கான சான்றிதழ், கண், காது பரிசோதனை, ரத்தப்பரிசோதனை சான்றிதழ் ஆகியவை அரசு டாக்டரின் கையொப்பம், முத்திரையுடன் இருக்க வேண்டும். இச்சான்றிதழை பெற தினமும் தேர்வர்கள் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு வந்து வெளிநோயாளிகள் சீட்டு பதிவு செய்து, பரிசோதனை முடித்து சான்றிதழ் பெறுவதற்கு காத்திருக்கும் நிலை தொடர்கிறது. அரசு போக்குவரத்து கழகத்தின் ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட டிப்போவில் மருத்துவ முகாம் நடத்தபடுவதை போல தற்போது அனைத்து தேர்வர்களுக்கும் மொத்தமாக அந்தந்த மாவட்ட அரசு டிப்போவில் வைத்து மருத்துவ முகாம் நடத்தி மருத்துவ தகுதிச்சான்று கொடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.