உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ கழிவு வாகனங்களை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

மருத்துவ கழிவு வாகனங்களை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

மதுரை: கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்த வாகனத்தை விடுவிக்க தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 'இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த வாகனங்களை ஜப்தி செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.கேரளாவை சேர்ந்தவர் ஷிபு. இவர் கடந்த 2023ல் கேரளாவிலிருந்து வாகனத்தில் சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்ததாக கன்னியாகுமரி மாவட்டம் அருமனை போலீசார், வாகனத்தை பறிமுதல் செய்தனர். வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி ஷிபு தாக்கல் செய்த மனுவை நாகர்கோவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார்.

நீதிபதி பி.புகழேந்தி:

கேரளாவிலிருந்து சட்ட விரோதமாக கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களின் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, அரசு தரப்பின் பதில் திருப்திகரமாக இல்லை. எல்லையோர சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் எடுத்துள்ள நடவடிக்கையை அங்கீகரிக்கும் அதே வேளையில், இவ்வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் எதுவும் இதுவரை ஜப்தி செய்யப்படாததை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் திடக்கழிவு வாகனங்களை பறிமுதல் மற்றும் ஜப்தி செய்ய வேண்டும். அவற்றை சென்னை பெருநகரமாக இருந்தால், சம்பந்தப்பட்ட மண்டல கண்காணிப்பு பொறியாளர், மாநகராட்சி எனில் கமிஷனர், நகராட்சியாக இருந்தால் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், பேரூராட்சி எனில் பேரூராட்சி உதவி இயக்குநரிடம் அந்த வாகனங்களை ஒப்படைக்க வேண்டும்.வழக்கு பதிந்து, விசாரணையை தொடர்வது மட்டும் போதாது. இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஜப்தி செய்ய வேண்டும். இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

3 பேர் மீது வழக்கு பதிவு

பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேலப்பகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி, 65, என்பவருக்கு சொந்தமான வேஸ்ட் குடோனில், பிளாஸ்டிக், ரப்பர், தோல் பொருட்கள், பாட்டில்கள் உள்ளிட்ட ஏராளமான கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.கடந்த 31ம் தேதி கேரளாவில் இருந்து லாரியில் இங்கு கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகள், குடோனில் கொட்டப்பட்டன. தகவலறிந்த பொதுமக்கள், மருத்துவ கழிவுகள் கொட்டிய லாரியை சிறைபிடித்தனர். அதிகாரிகள் விசாரித்ததில், குடோன், உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது தெரிந்தது. வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், குடோன் உரிமையாளர் மற்றும் கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த முகமது சுகேல், 45; வாகன உரிமையாளர் ஜாகீர் உசேன், 49 ஆகியோர் மீது பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
பிப் 04, 2025 08:37

எல்லையோர சோதனைச் சாவடிகளில் இது போன்ற வாகனங்களை உள்ளே அனுமதிப்பர்களும் அங்கே வேலை பார்ப்பவர்களையும் உள்ளே தள்ள வேண்டும் ஏனென்றால் அவர்களின் அனுமதி இல்லாமல் இந்த வாகனங்கள் தமிழக எல்லைக்குள் உள்ளே நுழையமுடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை