உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி மெகா சீனியர் துரைமுருகன் சம்மதம்
சென்னை:'உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுக்க இன்னும் நேரம் கனியவில்லை' என முதல்வரிடமே கூறிவந்த மூத்த தி.மு.க., தலைவர் துரை முருகன், அந்த நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக் கொண்டுள்ளார். அவருக்கு நெருக்கமான ஒரு தலைவர் கூறியதாவது: அமைச்சர் பதவியில் இருக்கும்போதே உதயநிதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் வைத்துவரும் சூழலில், துணை முதல்வராக அந்தஸ்து உயர்த்தப்பட்டால், இன்னும் வேகமான தாக்குதலை சந்திக்க நேரிடும்.குறிப்பாக பா.ஜ.,வின் அம்புகளை சமாளிக்க தேவையான பக்குவமும் சாமர்த்தியமும் வந்துவிட்டதாக முதல்வருக்கு நம்பிக்கை வரும் வரை பொறுத்திருக்கலாம் என துரை கூறி வந்துள்ளார். கட்சியின் பொது செயலர், மிகவும் மூத்த தலைவர் என்பதால் அவரது ஆலோசனையை எவரும் நிராகரிப்பது இல்லை. அதே சமயம், உதய்க்கு பதவி உயர்வு கிடைப்பதை துரைமுருகன் விரும்ப வில்லை அல்லது ஜீரணிக்கவில்லை என சமூக ஊடகத்தில் பரவிய செய்திகளால் அவர் தர்மசங்கடம் அடைந்தார். இதையடுத்து, உதயநிதிக்கு உடனே துணை முதல்வர் பதவியை வழங்கலாம் என ஸ்டாலினுக்கு அவர் பரிந்துரை செய்துள்ளார். உதய் தலைமையை ஏற்று இளைஞர்கள் அதிகமாக தி.மு.க.,வில் சேர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு கூறினார். இது குறித்து தி.மு.க., வெளியிட்ட வீடியோவில் துரைமுருகன் கூறியுள்ளதாவது:நிறைய இளைஞர்கள், படித்தவர்கள், தி.மு.க., பக்கம் திரும்பி உள்ளனர். அவர்களை எல்லாம் மனமார வரவேற்கிறேன். இளையோர் வந்தால்தான், இக்கட்சியை அடுத்து நடத்த வாய்ப்பு ஏற்படும். மன திடத்தோடு வாருங்கள். கட்சிக்கு நீண்ட வரலாறு உண்டு. அதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களை மனமார வரவேற்கிறேன். எங்களுக்குப் பின், இந்த கட்சியை நீங்கள்தான் கட்டிக்காக்க வேண்டும். இது மேனாமினுக்கி கட்சி அல்ல. அடித்தளத்தில் உள்ள மக்களுக்காக உழைக்கிற கட்சி என்பதையும் மனதில் நிறுத்துங்கள்.