சென்னை : சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துடன் இணைத்து, நான்கு மண்டலங்களுடன், புதிதாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனரகம் உருவாக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை நகர்ப்புற வளர்ச்சியால், காவல் கண்காணிப்பு முறையில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, 2005ல், சென்னை மாநகர காவல்துறையும், செங்கல்பட்டு கிழக்கு காவல் மாவட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல்துறை கமிஷனரகம் உருவாக்கப்பட்டது. வேகமாக பெருகி வரும் சென்னை புறநகர்ப் பகுதிகளை, சென்னை போலீஸ் கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2008ல் மறு சீரமைப்பு மூலம், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரகம் புதிதாக ஏற்படுத்தப்பட்டது.ஆனால், காவல் கண்காணிப்பு முறையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2005ல், ஒரே நிர்வாகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சென்னை பெருநகர காவல் கமிஷனரகமே குற்றத்தடுப்பிற்கு ஏதுவாகவும், சிறப்பாக செயல்பட உகந்ததாகவும் இருக்கும் என, கருதப்படுகிறது. எனவே, சென்னைப் புறநகர் போலீஸ் கமிஷனரகத்தை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரகத்துடன் ஒருங்கிணைத்து, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்படும். இந்த கமிஷனர் அலுவலகம், நிர்வாக வசதிக்காக, வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய மண்டலம் என நான்கு மண்டலங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
நில அபகரிப்பு புகார்கள்: நில அபகரிப்பு குறித்த புகார்களை விசாரிக்க, மாவட்டங்களில் சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதம்வரை, 2,491 புகார்கள் பெறப்பட்டுள்ளன. நில அபகரிப்பில் ஈடுபடுபவர் மீது, கடும் நடவடிக்கைகளை எடுத்து, அந்நிலங்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.சைபர் குற்றங்களை திறம்படத் தடுக்க சேலத்திலும், திருநெல்வேலியிலும் சைபர் குற்றப்பிரிவுகள் துவக்கப்படும். சைபர் தடவியல் சோதனைக் கூடங்கள், சென்னை மாநகர காவல், குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளன. இந்த சோதனைக் கூடங்கள், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பிற ஆறு மாநகரங்களிலும் ஏற்படுத்தப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
6,000 போலீசார் விரைவில் தேர்வுதற்போது காலியாக உள்ள, 896 சப் - இன்ஸ்பெக்டர்கள், 121 தொழில்நுட்ப சார் இன்ஸ்பெக்டர்கள், 5,588 இரண்டாம் நிலை போலீசார் பணியிடங்கள் ஆகியவை விரைவில் நிரப்பப்படும் என்றும், கூடுதலாக தேவைப்படும் போலீசார் எண்ணிக்கை குறித்து, உரிய முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு, அப்பணியிடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு 54 கோடிகாவல் துறையை நவீனப்படுத்தும் திட்டம், மத்திய அரசின் நிதி உதவியுடன், 2001ம் ஆண்டுமுதல் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. போலீசார் நவீன ஆயுதங்களை கையாளத் தேவையான பயிற்சியும், வாகனங்களும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. இதற்காக, 2011-12ம் ஆண்டு திட்ட மதிப்பீட்டில், 54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவலர் பயிற்சிக்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.