முருங்கை கீரை பொடி தொழிற்சாலை தனியார் துவக்க முன்வந்தால் மானியம் அமைச்சர் அன்பரசன் உறுதி
சென்னை:''தனியார் தொழில் முனைவோர் முன்வந்தால், சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், மானியத்துடன் வங்கி கடன் உதவியுடன், முருங்கை கீரை பொடி தயாரிப்பு தொழிற்சாலை அமைத்து தரப்படும்,'' என, குறு, சிறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - தேன்மொழி: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில், 550 ஏக்கர் பரப்பளவில், முருங்கை பயிரிடுகின்றனர். இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, தேனி, திருச்சி, துாத்துக்குடி மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும், 100 டன் முருங்கைக்காய், 3 டன் முருங்கை கீரை விற்பனைக்கு செல்கிறது. திருவிழா காலங்களை தவிர, மற்ற நாட்களில், அவற்றுக்கு குறைந்த விலையே கிடைக்கிறது. மருத்துவ பயன் உடைய முருங்கை கீரை பொடி தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து தர வேண்டும்.அமைச்சர் அன்பரசன்: தமிழகத்தில், 20,741 ெஹக்டேரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு, 8.41 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில், முருங்கை மதிப்பு கூட்டும், 36 தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திலும், இரண்டு தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதனால், அங்கு முருங்கை கீரை பொடி தொழிற்சாலை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.தேன்மொழி: முருங்கை கீரைக்கு உரிய விலை கிடைக்காததால், குறைந்த விலையில் இடைத்தரகர்களிடம் கொடுக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் வேடச்சந்துாரில் முருங்கை பதப்படுத்தும் நிலையம், 4 கோடி ரூபாய் செலவில் அமைத்து தரப்பட்டது. அதேபோன்று, நிலக்கோட்டையிலும் முருங்கை கீரை மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைத்து, சந்தை கட்டமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.தனியார் தொழில் முனைவோர் முன்வந்தால், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கி, ஐந்து வகையான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், மானியத்துடன் வங்கி கடன் பெற்று, முருங்கை கீரை பொடி தொழிற்சாலை அமைக்கலாம். தொழில் முனைவோர் பொது வசதி மையம் அமைத்து தரவும் தயாராகவுள்ளோம்.இவ்வாறு விவாதம் நடந்தது.