பேரிடர் மீட்புக்கு அதிநவீன வாகனங்கள் ஆய்வு செய்வதாக அமைச்சர் அறிவிப்பு
சென்னை: ''பேரிடர் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து, அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கூறினார். சட்டசபையில் நடந்த விவாதம்: தி.மு.க., - பிச்சாண்டி: வளர்ந்த நாடுகளும் இயற்கை பேரிடர்களில் தப்புவதில்லை. சமீப காலமாக நாடு முழுதும் இயற்கை பேரிடர் பாதிப்பு ஏற்படுகிறது. சமீபத்தில், பஞ்சாப் மாநிலத்தில் வெள்ள சேதம் ஏற்பட்டது. அப்போது, நீரிலும், தரையிலும் பயன்படுத்தும் நவீன வாகனத்தை பயன்படுத்தி, பேரிடர் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதேபோல, தமிழகத்திற்கும் அதிநவீன வாகனங்களை, அரசு வாங்க வேண்டும். அமைச்சர் ராமச்சந்திரன்: நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பேரிடர்களின்போது, மீட்பு பணி மேற்கொள்ள, தீயணைப்பு துறையில் ஒன்பது நவீன மீட்பு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், 193 கோடி ரூபாய்க்கு பேரிடர் மீட்பு உபகரணங்களும் வழங்கப்பட்டு உள்ளன. பேரிடர்களை திறம்பட சமாளிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பிச்சாண்டி: கேம்பிரிட்ஜ் பல்கலை வெளியிட்ட நுால் ஒன்றை சமீபத்தில் படித்தேன். அதில் பேரிடர் மீட்பு வாகனங்கள் குறித்து விளக்கப்பட்டு உள்ளது. அந்த வாகனங்களை பயன்படுத்தி, மேடு, பள்ளங்களையும், வெள்ளத்தில் துண்டித்த பகுதிகளுக்கும் சென்று, மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியும். அவற்றை கொள்முதல் செய்ய வேண்டும். அமைச்சர் ராமச்சந்திரன்: அதிகாரிகளை அனுப்பி, அந்த இயந்திரங்களை பார்வையிட்டு வாங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.