உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒடிஷா, புதுச்சேரி மாநிலங்களில் உயிரிழப்புகள் தவிர்ப்பு கோல்ட்ரிப் மருந்து குறித்து அமைச்சர் விளக்கம்

ஒடிஷா, புதுச்சேரி மாநிலங்களில் உயிரிழப்புகள் தவிர்ப்பு கோல்ட்ரிப் மருந்து குறித்து அமைச்சர் விளக்கம்

சென்னை:“அரசு விரைந்து எடுத்த நடவடிக்கையால், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து வாயிலாக, ஒடிஷா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடக்கவிருந்த கூடுதல் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு உள்ளன,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். இருமலுக்கான 'கோல்ட்ரிப்' மருந்து குடித்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, 25 குழந்தைகள் பலியாகினர். இந்த மருந்தை தடை செய்வது தொடர்பாக, சட்டசபையில் பல்வேறு கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த விவாதத்தில், அ.தி.மு.க., - உதயகுமார், பா.ஜ., - வானதி உள்ளிட்டோர் பேசினர். அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த விளக்கம்: மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் என்ற மருந்துதான் காரணம் என தெரிவிக்கப்பட்டது. அடுத்த, 30 நிமிடங்களில் முதுநிலை மருந்து ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். அங்கு கைப்பற்றப்பட்ட ஐந்து மருந்துகள் அவசர பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில், கோல்ட்ரிப் என்ற மருந்தில், 'டை எத்திலின் கிளைக்கால்' என்ற உயிர்கொல்லி வேதிப்பொருள், 48.6 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த நிறுவனத்தில் இருந்து, ஒடிஷா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கும் மருந்து விற்பனைக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது. இரு மாநிலங்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதல் குழந்தை உயிரிழப்பு, செப்டம்பர் 4ம் தேதி நடந்துள்ளது. ஆனால், 25 நாட்களுக்கு பின்தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த 48 மணி நேரத்தில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திற்கு, 2011ம் ஆண்டு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது, விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில், 397 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதன் வாயிலாக ஆண்டுக்கு, 12,000 முதல் 15,000 கோடி ரூபாய்க்கு மருந்து ஏற்றுமதி நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில், தமிழகத்தில் மருந்து ஏற்றுமதி பாதிக்கும் சூழல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒடிஷா, புதுச்சேரி மாநிலத்திற்கு விரைந்து தகவல் தெரிவிக்கப்பட்டதால், கூடுதல் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், 'கோல்ட்ரிப் நல்ல மருந்து' என, மத்திய பிரதேச அதிகாரிகள் கூறி வருகின்றனர். மருந்து தயாரிப்பு நிறுவனங்களில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக, மத்திய அரசு இந்த சோதனைகளை செய்யவில்லை. மருத்துவர் ஆலோசனை இல்லாமல், மருந்துகள் வாங்கி பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை