பிளஸ் 1 தேர்வு ரத்தால் கல்வித்தரம் பாதிக்காது அமைச்சர் மகேஷ் தகவல்
சென்னை:“தமிழகத்தில், பிளஸ் 1 தேர்வு ரத்து செய்யப்பட்டதால், கல்வித்தரம் பாதிக்கப்படாது,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். சென்னையில், அவர் அளித்த பேட்டி: தமிழக பள்ளிகளில், ஆண்டு முழுதும், தற்போது பல்வேறு பகுப்பாய்வு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மனரீதியாக பாதிப்பு அதனால், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு தேவைப்படவில்லை. 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என, தொடர்ந்து மூன்று ஆண்டுகளும், பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அதேநேரம், பிளஸ் 1 பாடங்களை படிக்காமல், எந்த போட்டித் தேர்விலும் பங்கேற்க முடியாது என்பதால், பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், கல்வியின் தரம் பாதிக்கப்படாது. 'யுனெஸ்கோ' அமைப்பால் கண்டிக்கப்பட்ட, 'ஏசெர்' என்ற அறிக்கையை வைத்துக் கொண்டு, தமிழக கவர்னர் ரவி, தமிழக மாணவர்களின் கல்வி தரம் குறித்து, தொடர்ந்து குறை கூறி வருகிறார். எங்கிருந்தோ வந்து, தமிழக அரசின் நிதியில் வசதிகளை அனுபவித்துக் கொண்டு, அவர் வன்மமாக பேசுவதால், இங்குள்ள ஆசிரியர்களும், மாணவர்களும், மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது, மாநில கற்றல் அடைவு தேர்வுகளை, மாநில திட்ட கமிஷன் வாயிலாக நடத்தி, அதன் அடிப்படையில், அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் ஊக்குவித்து, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், மெதுவாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவும், நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி., பாடப்புத்தகங்களில், தமிழக வரலாறு மறைக்கப்படுவதால், தமிழக பாடத்திட்டத்தில், புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கும் போது, தமிழகத்தின் தனித்த வரலாறுகள் சேர்க்கப்படும். கட்டாய திணிப்பு தமிழக மாணவர்கள், எந்த மொழியையும் கற்பதற்கு தடை விதிக்கவில்லை. ஆனால், ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் கட்டாயப்படுத்தி திணிப்பதால், மாணவர்கள் தேர்ச்சி அடைய மாட்டார்கள். அதை வைத்து, அவர்களை தரம் தாழ்த்திவிடக் கூடாது என்பதற்காகத்தான், மும்மொழி கொள்கையை கைவிட்டுஉள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.