பொது பயன்பாட்டுக்கான நிலங்களை தனியார் ஆக்கிரமித்தால் மீட்கப்படும் அமைச்சர் நேரு உறுதி
சென்னை:''பொது பயன்பாட்டுக்கான நிலங்களை தனியார் ஆக்கிரமித்திருந்தால், அவர் எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும், மீட்டு கொண்டு வந்து விடலாம்,'' என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கூறினார்.சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:தி.மு.க., - வரலட்சுமி: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சி பகுதியில், பெண்களுக்கு என்று தனியாக மகளிர் பூங்கா அமைத்து, அதில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும். இங்குள்ள, நின்னகரை ஏரி, நகரின் மத்திய பகுதியில் உள்ளது. இது, 110 ஏக்கர் பரப்பளவு உடையது. அதை சீரமைத்து, பூங்கா அமைத்து தர வேண்டும்.அமைச்சர் நேரு: மறைமலை நகர் நகராட்சியில் தேவையான இடம் இருந்தால், உடனடியாக பூங்கா அமைத்து தரப்படும். சென்னையில் இருந்து திருச்சி, மதுரை நோக்கி செல்லும் பிரதான சாலையில், செங்கல்பட்டு நகராட்சியில், நீர்வளத்துறையின் கொளவாய் ஏரி உள்ளது.இந்த ஏரியில் மருத்துவ கழிவுகள், சாக்கடை நீர் கலக்கின்றன. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கேட்டேன். 'புதிதாக ரயில்வே லைன் போடும் போது, நீர்நிலையில் இருந்து தண்ணீர் வடியாமல் இருக்கும் வகையில், உயரமான பவுண்டேஷன் போட்டதே காரணம்' என்றார். இதை மாற்றி தர வேண்டும் என, ரயில்வே மேலாளரிடம் கேட்கப்பட்டது. அவர் அனுமதி தர மறுக்கிறார். சென்னை அடையாறு போன்று, மாநிலம் முழுதும், 12 முக்கிய ஏரிகளை சீரமைத்து மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அப்போது, நின்னகரை ஏரி புனரமைப்பு குறித்து பரிசீலிக்கப்படும்.அ.தி.மு.க., - ராஜமுத்து: வீரபாண்டி, நெய்காரப்பட்டி ஊராட்சியில், கொட்டனத்தான் ஏரி உள்ளது. மாநகராட்சி கழிவுகள் இந்த ஏரிக்கு வருவதால், மக்கள் சிரமப்படுகின்றனர். இதை, திருமணிமுத்தாறுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் நேரு: அந்த கழிவுகளை, சேலத்தில் நடுப்புறம் ஓடும் நதியில் திருப்பி விட சொல்கிறார். வீரபாண்டி ஏரியை சுத்தம் செய்ய, 100 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. நிதி நிலைமைக்கு ஏற்ப கொட்டனத்தான் ஏரியும் சீரமைக்கப்படும்.பா.ம.க., - அருள்: சேலம் மாநகராட்சியில் புதிதாக, 'லே அவுட்' போடுகின்றனர். அங்கு பொது பயன்பாட்டிற்கு விடப்படும் ஓ.எஸ்.ஆர்., இடங்களை தனியார் ஆக்கிரமிக்கின்றனர். அந்த இடங்களில் பூங்கா அமைத்தால், சேலத்திற்கு, 150 முதல், 200 பூங்காக்கள் கிடைக்கும். ஒவ்வொரு பூங்காவிற்கும் 5 லட்சம் ரூபாய் தான் செலவாகும்.அமைச்சர் நேரு: பிளாட் போடும் போது நகராட்சி, மாநகராட்சிக்கு பொது பயன்பாட்டிற்கான இடம் ஒதுக்கப்படுகிறது. அதை தனியார் ஆக்கிரமித்திருந்தால், அவர் எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும், நிலத்தை மீட்டு கொண்டு வந்து விடலாம். குறிப்பிட்டு சொன்னால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.