ஜி.டி.நாயுடு பாலத்தில் ரப்பர் வேகத்தடை அமைச்சர் வேலு தகவல்
சென்னை: ''ஜி.டி.நாயுடு மேம்பாலம் மற்றும் உப்பிலிபாளையம் சந்திப்பில் விபத்தை தடுக்க, ரப்பர் வேகத்தடைகள் அமைக்கப்பட உள்ளன,'' என, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சட்டசபையில் நடந்த விவாதம்: பா.ஜ., - வானதி: கோவையில் சமீபத்தில் உயர்மட்ட மேம்பாலம் ஒன்று திறக்கப்பட்டது. அந்த மேம்பாலம் துவங்கும் இடத்தில், உப்பிலிபாளையம் மேம்பாலம் சந்திப்பு விரிவாக்கப்படாமல் உள்ளது. அது, தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த சந்திப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே, அந்த சந்திப்பை சீரமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் வேலு: கோவை நகரம் நாகரிகமான நகரம். அங்கு, 10.2 கி.மீ., நீளத்திற்கு மேம்பாலம் கட்டப் பட்டது. மேம்பாலத்திற்கு விஞ்ஞானி பெயரை வைக்க வேண்டும் என, அங்குள்ள தொழிலதிபர்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று, கோவை மண்ணை சேர்ந்த ஜி.டி.நாயுடு பெயர் வைக்கப்பட்டது. உப்பிலிபாளையத்தில் பெரிய ரவுண்டானா இருக்கிறது. அங்கு விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க, சாலை பாதுகாப்பு பொறியாளர்களை அழைத்து சென்று ஆய்வு செய்யப்பட்டது. பாலம் கட்டிய பின், கார் ஒட்டுபவர்கள் வேகமாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு ரப்பர் வேகத்தடைகள் அமைக்கப்பட உள்ளன. அந்த சந்திப்பில், போக்குவரத்து சிக்னல்களும் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.