அமைச்சர்களின் அலுவலகம் முற்றுகை: நாடார் சங்கம் அறிவிப்பு
சென்னை: ' நாடார் ஓட்டு, காமராஜர் தொண்டர்களின் ஓட்டு, உதயசூரியன் சின்னத்திற்கு இல்லை என, காமராஜர் நினைவிடத்தில் சத்தியம் செய்து உறுதி ஏற்போம்' என, தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்துரமேஷ் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: காமராஜர் குறித்து, அவதுாறாகப் பேசிய, 'யு டியூபர்' முக்தார் அகமது, தனது தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, வீடியோ வெளியிட வேண்டும். நாடார் சமுதாயப் பிரதிநிதிகள் என, தி.மு.க., வால் அங்கீகரிக்கப் பட்டுள்ள, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், கீதாஜீவன் ஆகியோருக்கு, காமராஜர் மீது பற்று இருந்தால், முதல்வரை சந்தித்து, முக்தார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். இல்லையெனில், அவர்களின் எம்.எல்.ஏ., அலுவலகங்களில், முற்றுகைப் போராட்டம் நடத்துவோம். முக்தாருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுத்து, அவரது செயலுக்கு துணைபோகும், தி.மு.க., அரசை கண்டித்து, சட்டசபை தேர்தலில், நாடார் ஓட்டு தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்திற்கு இல்லை என, சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்துவோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.