சென்னை: 'ஆறு மாதத்தில் ஆட்சி போனதும், சிறை சென்றுவிடுவோமோ?' என்ற பயத்திலேயே திமுக அமைச்சர்களுக்கு கருப்புப் பட்டையைக் கண்டால் கூட அவர்களுக்கு சிறை ஞாபகம் தான் வருகிறது,' என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை; சட்டப்பேரவையில் நான் பேச எழுந்தாலே பதறும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார். இவரது அரசை குற்றம் சொல்ல முடியாமல் வெளியேறினோமாம். நான் கேட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாமல், அமைச்சர்கள் பின்னாலும், சபாநாயகர் பின்னாலும் ஒளிந்துகொண்டு, இப்போது உங்களுக்கு இந்த சினிமா வசனம் எல்லாம் தேவையா?'எத்தனை போலீசார் கரூர் தவெக கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்?' என்ற கேள்விக்கு கூட, உங்களின் பதிலுக்கும், உங்கள் போலீசாரின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அளித்த பதிலுக்கும் முரண்பாடு இருக்கிறது. சட்டப்பேரவையில் கூட தெளிவான பதில் அளிக்க முடியாத நீங்கள், கரூர் சம்பவத்தை எந்த லட்சணத்தில் விசாரித்து இருப்பீர்கள் என்பதை தமிழக மக்கள் இன்று உணர்ந்திருப்பர்.கரூர் துயரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கேற்கும் வகையிலும், அவர்களின் சொல்லொண்ணா வலிகளையும், வேதனைகளையும் வெளிப்படுத்தும் வகையிலும் கருப்பு பட்டை அணிந்தால், அதையும் கிண்டல் செய்யும் தொனியில் உங்கள் சபாநாயகரும், அமைச்சரும், மிகக் கேவலமாகப் பேசினர்.'ஆறு மாதத்தில் ஆட்சி போனதும், சிறை சென்றுவிடுவோமோ?' என்ற பயத்திலேயே உங்கள் அமைச்சர்கள் திரிவதாலோ என்னவோ, கருப்புப் பட்டையைக் கண்டால் கூட அவர்களுக்கு சிறை ஞாபகம் தான் வருகிறது. 16வது சட்டப்பேரவையில் உறுப்பினர் எல்லோரையும் சேர்த்து பேசியதை விட, அதிகமாக பேசிய பெருமைக்குரிய சபாநாயகரோ, கருப்புப் பட்டையைப் பார்த்து 'ரத்தக் கொதிப்பா?' என்று கேட்கிறார்.இப்போது சொல்கிறேன். ஆம். ரத்தக் கொதிப்பு தான். ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம். இந்த துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல் உங்கள் திமுக அரசு அரசியல் செய்கிறதே. அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்புப் பட்டை அணிந்தோம்.ஸ்டாலின், இன்று நீங்கள் ஒரு முதல்வராக பொறுப்போடு பேசுவீர்கள் என்று எண்ணினேன். ஆனால் நீங்களோ, உங்கள் கருர் எம்எல்ஏ நடத்திய செய்தியாளர் சந்திப்பின் வெர்சன் 2.0 போல பேசியுள்ளீர்கள். உண்மை சுடும் என்பதை மட்டும் நினைவிற்கொள்க, எனக் குறிப்பிட்டுள்ளார்.