எம்.எல்.ஏ., பேச்சு அண்ணாமலை கண்டனம்
சென்னை: தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொ.ம.தே.க., பொதுச்செயலர் ஈஸ்வரன், ஒரு கூட்டத்தில் பேசும்போது, 'ஒரு ஆணும், பெண்ணும் இரவு, 11:00 மணிக்கு மேல், விமான நிலைய பின்புறம் விளக்கு வெளிச்சம் கூட இல்லாத இடத்தில் இருந்தனரே, அந்த சமூக சீரழிவை எப்படி தடுப்பது' என, கேட்டுள்ளார். இதை கண்டித்து, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: தி.மு.க.,வின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட ஒருவர், கோவையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் மீதே, பழியை சுமத்தி பேசியிருப்பது கண்டனத்துக்கு உரியது. குற்றவாளிகளை பற்றி எதுவும் கூறாமல், பாதிக்கப்பட்ட பெ ண் குறித்து, முற்றிலும் பிற்போக்கு தனமான கருத்தை தெரிவித்திருக்கிறார். தி.மு.க., ஆட்சியில், குட்டியை வைத்து ஆழம் பார்க்கும் குரங்கு கதையாக, முதலில் தன் ஊதுகுழல்களில் யாரையாவது வைத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சுமத்தி செய்தியாக்கி, பின், அந்த வழக்கை அப்படியே நீர்த்துப்போக செய்வது வழக்கமாகி விட்டது. அண்ணா பல்கலை மாணவி வழக்கிலும், மாணவியின் தனிப்பட்ட விபரங்களை, பொது வெளியில் வெளியிடும் அளவுக்கு, கீழ்த்தரமாக நடந்து கொண்டது, தி.மு.க., அரசு. கோவை மாணவி வழக்கில், குற்றவாளிகள் குறித்த மேலதிக தகவல்களை, காவல் துறை இதுவரை வெளியிடவில்லை. வழக்கம் போல், தி.மு.க., தனது கூட்டணி கட்சியினரை இதுபோன்று பேச துாண்டுவதாக கருதப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.