அன்னப்பறவை போல் நல்லதை எடுப்பவர் மோடி: துணை ஜனாதிபதி சி.பி.ஆர். புகழாரம்
திருப்பூர்: ''துணை ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த தேர்வுக்காக பிரதமர் மோடி முயற்சித்தார்; கடைசி நேரத்தில் முடியாமல் போனது,'' என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின், முதன்முதலாக தன் சொந்த ஊரான திருப்பூருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வந்தார். அவருக்கு, 'திருப்பூர் பீப்பிள்ஸ் போரம்' மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணை தலைவர் சக்திவேல் வரவேற்றார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: நமது முடிவின்படி மட்டும் நமது பயணம் தொடர்வதில்லை. நாம் ஒரு திசையை நோக்கி சென்று கொண்டிருப்போம்; கால சூழலும், இறை விருப்பமும் வேறாக இருக்கும் என்பது தெரியாமல் பயணிப்போம். வங்கதேசத்துக்கு ஆடை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த போது, முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. இங்குள்ள கே.எஸ்.சி., பள்ளியில் படிக்கும்போதும் கூட, பள்ளி மாணவர் சங்க தலைவராக வெற்றி பெற்றேன். பள்ளியில், பலருடன் இணைந்து பணியாற்றினேன்; யாருடன் தொடர்வோம், யாரையெல்லாம் பிரிவோம் என்று தெரிவதில்லை. கரம் காத்தது அவிநாசியப்பரின் அருளும், சுந்தரமூர்த்தி நாயனாரின் அருளும் இல்லாமல் இன்று உங்கள் முன் நிற்க வாய்ப்பே இல்லை. தண்ணீரில் விழுந்தால், நீச்சல் தெரியாதவர் மூன்று முறை மேலே வருவார்கள் என்று நம்புகிறோம். ஆறு வயது சிறுவனாக இருந்த போது, தாமரைக்குளத்தில் விழுந்த போது, மூன்றாவது முறையாக மேலே வந்த போது ஒரு கரம் என்னைக் காப்பாற்றியது. முழு நேர அரசியலுக்கு வந்ததும் நினைத்து பார்க்காதது தான். பாரதிய ஜன சங்கம் துவக்கிய போது, என்னுடன் ஐந்து பேர் இருந்தனர். மாதம், 25 ரூபாய் வாடகைக்கு அறை எடுத்து கட்சி அலுவலகம் நடத்தினோம். நான்கு பேர் மாணவர்கள் என்பதால், வாடகை கொடுக்கவே சிரமமாக இருந்தது.என் அப்பாவிடம் கல்வி கற்க பணம் வேண்டுமென கேட்டால், மணியார்டர் அனுப்புவார்; அதை திருப்பூருக்கு அனுப்பி, கட்சி அலுவலக வாடகை கொடுத்திருக்கிறோம். வாக்கு பலித்தது ஒரு நாள் சாய ஆலையில் தங்கியிருந்த போது, ஜோதிடம் அறிந்த நண்பரின் மாமா ஒருவர், ' நீ இரண்டு முறையாவது எம்.பி. ஆவாய்' என்றார். கேட்டதும் எனக்கு சிரிப்பே நிற்கவில்லை. 'எங்க ஏரியாவில் கவுன்சிலர் ஆவதே சிரமம்' என்று நகைச்சுவையாக கூறினேன். இன்று அவர் உயிருடன் இல்லை; அவரது வாக்கு பலித்திருக்கிறது. நீங்காத வருத்தம் கோவை பார்லிமென்ட் தொகுதியில், இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவை தோற்கடித்த போதும், நான் மகிழ்ச்சி அடையவே இல்லை; மனதில் ஆழமான வருத்தத்தை அந்த வெற்றி எனக்கு தந்தது. அவரது கொள்கை, சிந்தனை வேறு என்றாலும், நல்லகண்ணு மீது மாறாத அன்பும்; சிறிதும் குறைவில்லா மரியாதையும் இருந்தது. 'பொதுவாழக்கை என்பது பிறருக்காக மட்டுமே வாழ்வது' என்பதை நிரூபித்து காட்டியவர். வழிகாட்டிய வாஜ்பாய் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போல, அனைவரையும் அரவணைத்து செல்லும் மகத்தான தலைவரை பார்த்ததில்லை. அரசியலில், தேர்தல் வந்தால் மாற்று கருத்துக்களும், மாற்று சிந்தனைகளும் இருக்கத்தான் செய்யும். தேர்தலுக்கு பின், மக்கள் சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும்; அப்போதுதான், மக்கள் உயர்வார்கள்; மாநிலம் உயரும்; நாடும் உயரும். பிரதமரின் முயற்சி துணை ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த தேர்வுக்காக, பிரதமர் மோடி மிகப்பெரிய முயற்சி எடுத்தார். கடைசி நேரத்தில் முடியாமல் போனது. அப்போது, தமிழக சமூக வலைதளங்களில், 'சி.பி.ஆர். தோற்கப்போகிறார்; இதோடு மோடியும் தோற்கப்போகிறார்' என்று பதிவிட்டிருந்தனர். அந்நேரத்திலும், இறைநம்பிக்கைதான் என்னை தேற்றியது. 'எந்நேரத்திலும் நாம் தோற்க போவதில்லை. நல்லாட்சி நடத்தும் மோடியும் தோற்கமாட்டார்; நமது இறை நம்பிக்கை தோற்காது' என்று தோன்றியது.மனநம்பிக்கையை கூட்டும் ஒன்று புறத்தில் இருப்பது, இறை நம்பிக்கை மட்டும்தான். இறை நம்பிக்கை இல்லாத எதுவும் சிறந்ததாக இருக்கலாம்; மிகச்சிறந்ததாக இருக்க முடியாது. நான் பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டேன். அவரின் மிகப்பெரிய 'பிளஸ் பாயின்ட்' எது என்றால், அவரிடம் யார் வேண்டுமானாலும், எந்த கருத்தை வேண்டுமானாலும், எத்தனை மணி நேரமானாலும் சொல்லலாம். அவர் மறுப்பு சொல்ல மாட்டார்; கேட்டுக்கொண்டே இருப்பார். அன்னப்பறவை போல் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்வார்; உலக அளவில், ஒப்பீடற்ற தலைவராக மோடி திகழ்கிறார். புடின் என்ன சொல்கிறார்... டிரம்ப் என்ன சொல்கிறார் என்று உலக நாடுகள் கவனிப்பதில்லை. இந்திய பிரதமர் மோடி என்ன சொல்கிறார் என்பதை தான் உலக நாடுகள் கவனிக்கின்றன. எந்த இடத்திலும் தன்னிலை மறந்து பேசாத தலைவராக மோடி திகழ்கிறார். அப்படியான ஒருவரால் மட்டுமே தேசத்தை வழிநடத்த முடியும். பல்வேறு சிரமங்களுக்கு பிறகுதான், நல்லிணக்கத்தை நாடு முழுவதும் உருவாக்குகின்றனர். இவ்வாறு, ராதாகிருஷ்ணன் பேசினார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், திருப்பூர் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஸ்ரீகாந்த், தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்புக்குட்டி, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட தலைமை நிர்வாகி கோபாலகிருஷ்ணன், பா.ஜ. மாநில இணைப்பார்வையாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஆனந்தன், மகேந்திரன், ராதாகிருஷ்ணன், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.