உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதவி நாற்காலியை காப்பாற்ற ஆதரவு கேட்கிறார் மோடி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பதவி நாற்காலியை காப்பாற்ற ஆதரவு கேட்கிறார் மோடி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை : மயிலாடுதுறையில் நேற்று நடந்த அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:நாங்கள் தேர்தலுக்காக, தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து, முகத்தை காட்டுபவர்கள் இல்லை. அப்படி வருகிறவர்கள் யாரென்று, நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இப்போது, தேர்தல் தேதி அறிவிக்கப் போகின்றனர். நம் பிரதமர், தமிழகத்திற்கு அடிக்கடி வரத்துவங்கி இருக்கிறார்; வரட்டும். அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழகத்துக்கு நன்மை செய்து விட்டு, நாம் வைக்கிற மிக நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டு வரட்டும்.அப்படி இல்லாமல், தமிழக மக்களின் வரிப்பணமும், ஓட்டும் மட்டும் போதும் என்று வருகிறார். நாம் சமீபத்தில் இரண்டு மிகப்பெரிய இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டோம். அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய, 37,000 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்டோம். அதை கொடுத்து விட்டு, தமிழகத்துக்கு பிரதமர் வந்தாரா; ஒரு சல்லிக்காசு கூட கொடுக்கவில்லை. ஆனால், தங்களுடைய பதவி நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள மட்டும், ஆதரவு கேட்டு வருகின்றனராம். தமிழக மக்கள் ஒரு போதும் இவர்களை பார்த்து, நிச்சயம் ஏமாற மாட்டார்கள்.தமிழக உரிமைகளுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும், நம் அரசின் பக்கம் தான், தமிழக மக்கள் என்றைக்கும் நிற்பர். இவ்வாறு பேசினார்.

'நீங்கள் நலமா' திட்டம் நாளை துவக்கம்

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:'நத்தம் இணையவழி பட்டா மாறுதல்' என்ற புரட்சிகரமான திட்டத்தை துவக்கி வைத்துள்ளேன். வருவாய் துறை வரலாற்றிலேயே, கிராமப்புற நத்தம் பட்டாவை, கணினி வழியாக வழங்குவது இது தான் முதல்முறை. முதல் கட்டமாக, 75.33 லட்சம் பட்டாதாரர்கள் பயன் பெறப் போகின்றனர்.மேலும், அரசு திட்டங்களின் பயன்கள், உரிய மக்களுக்கு போய் சேர்ந்திருக்கிறதா என்று உறுதி செய்வதற்கு, ஒரு புது திட்டத்தை, வரும் 6ம் தேதி சென்னையில் துவக்கி வைக்க உள்ளேன்.அந்த திட்டத்தின் பெயர், 'நீங்கள் நலமா' என்பதாகும். இந்த திட்டம் வழியாக, பொது மக்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்கப் போகிறோம்.அந்த கருத்துக்கள் அடிப்படையில், நம் அரசின் திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும். முதலில் நலத்திட்டங்கள் குறித்தும், அடுத்த கட்டமாக, அரசுத் துறையால் வழங்கப்படும் சேவைகள் குறித்தும் கருத்துக்கள் பெற்று, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ