உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்

நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் காலமானார்

நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், 80, சென்னையில் காலமானார். தஞ்சாவூரில் 1945ல் பிறந்தவர் இல.கணேசன். திருமணமாகாதவர். இவருக்கு இம்மாதம் 4ம் தேதி, நீரழிவு பாத புண் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அறுவை சிகிச்சை நடந்தது. தீவிர சிகிச்சை கால் மரத்து போனதால், 5ம் தேதி காலை வீட்டில் தவறி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியவருக்கு, 8ம் தேதி அதிகாலை தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரமாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை 6:23 மணிக்கு, அவரது உயிர் பிரிந்தது. வருவாய் துறை பணியை ராஜினாமா செய்து விட்டு, ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியராக சென்றவர் இல.கணேசன். கன்னியாகுமரி, நெல்லை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். ஆர்.எஸ்.எஸ்., மாநில இணை அமைப்பாளராக செயல்பட்ட நிலையில், 1991ல் பா.ஜ., மாநில அமைப்பு பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். மொத்தம் 13 ஆண்டு கள் அப்பொறுப்பில் இருந்தார். அதன்பின் கட்சியின் தேசிய செயலர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் என, பல்வேறு பொறுப்புகளை வகித்தார். இரண்டு ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார். கடந்த 2021ல், மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டார். சில மாதங்கள் மேற்கு வங்க மாநில பொறுப்பு கவர்னராக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, நாகாலாந்து கவர்னராக இருந்து வந்தார். கருணாநிதியுடன் நட்பு கடந்த 1998 முதல் 2004 வரை, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இல.கணேசன் தமிழக அரசியலில், செல்வாக்கு மிக்கவராக இருந்தார். கடந்த 1998ல் அ.தி.மு.க., 1999ல் தி.மு.க., உடன் பா.ஜ., கூட்டணி அமைய காரணமாக இருந்தார். மறைந்த கருணா நிதியுடன் மிக நெருங்கிய நட்பில் இருந்தவர். அந்த நட்பை முதல்வர் ஸ்டாலினுடனும் தொடர்ந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் அவரது 80வது பிறந்த நாள் விழாவில், முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா பங்கேற்றார். இல.கணேசன் மறைவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொது ச்செயலர் பழனிசாமி, காமராஜர் மக்கள் கட்சி மாநில பொதுச் செயலர் பா.குமாரய்யா மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ