கால்நடை நோய் தடுப்பு பணி பராமரிப்புத்துறை அலட்சியம்
பருவ மழை சீசனில், கால்நடைகள் பல நோய் தாக்குதலுக்கு ஆளாகி வரும் நிலையில், கால்நடை துறையினர், கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தாமல் அலட்சியம் காட்டுவதால், பால் உற்பத்தி குறைவதுடன், கால்நடை வளர்ப்பும் சவாலாகி உள்ளது. உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக கறவை மாடுகள் அதிகளவு பராமரிக்கப்படுகின்றன. ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்கின்றனர். கால்நடை வளர்ப்போர் கூறியதாவது: கறவை மாடுகளில், கோமாரி, உண்ணிக்காய்ச்சல், மடிவீக்க நோய் மற்றும் அம்மை நோய் போன்றவை ஏற்பட்டு, அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது குறித்து அருகிலுள்ள கால்நடை கிளை நிலையங்கள், மருந்தகங்களுக்கு தகவல் கொடுத்தாலும், சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு பணிகளில் கால்நடை மருத்துவர்கள் அலட்சியமாக உள்ளனர். இதனால், சிகிச்சைக்கு தனியாரை மட்டுமே நம்பியுள்ளோம். முன்னர் ஒவ்வொரு சீசனிலும், மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு கால்நடைத்துறையால் வழங்கப்படும்; துண்டு பிரசுரங்கள் வினியோகித்து, ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இத்தகைய முகாம்கள் தற்போது நடைபெறுவதில்லை. முறையாக தகவல் தெரிவிக்காமல், பெயரளவுக்கு முகாம்களை நடத்துகின்றனர். இவ்வாறு தெரிவித்தனர். - நமது நிருபர் -