போக்குவரத்து கழகங்களுக்கு புதிய ஏசி பஸ்கள் தயார் கேமரா உள்ளிட்ட வசதியுண்டு
சென்னை:நவீன தீயணைப்பு வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன், புதிய, 'ஏசி' விரைவு பஸ்கள், அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வர உள்ளன.தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, புதிய பஸ்கள் வாங்க அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட டெண்டர் அடிப்படையில், 50 விரைவு பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இந்த புதிய பஸ்களில், ஆம்னி பஸ்களுக்கு இணையான, நவீன வசதிகள் இடம் பெறுகின்றன. குறிப்பாக, தானியங்கி தீயணைப்பு வசதி இடம் பெற்றுள்ளது. இதன் வாயிலாக, பஸ்சுக்குள் சிறிய புகை வெளியேறினாலும் அலாரம் அடித்து விடும். அது, தீயாக இருக்கும் பட்சத்தில், ஓட்டுநர் பட்டனை அழுத்தியதும், ரசாயனம் வெளியேறி தீ அணைக்கப்படும். அதிகமாக தீ பரவினால், ஓட்டுநரை எதிர்பாராமல் தீயணைக்கும் அமைப்பு இயங்கி விடும். இந்த அமைப்பு இன்ஜினில் மட்டுமின்றி, பயணியர் பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளது. வண்டியை பின்நோக்கி இயக்க ஏதுவாக, கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து இருக்கைக்கு அருகிலும், அவசரகால பட்டன் உள்ளது. 29 'ஏசி' விரைவு பஸ்களும், 21 ஏசி இல்லாத பஸ்களும் அடுத்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.