சென்னை : சொத்துக்களின் பட்டா தொடர்பான முந்தைய மாற்றங்களை அறிந்து கொள்வதற்கான புதிய வசதியை, வருவாய் துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது, அதற்கான பத்திரத்தை சரி பார்ப்பதுடன், பட்டாவையும் ஆய்வு செய்ய வேண்டும். பத்திரப்பதிவு, கட்டட அனுமதி போன்ற பல்வேறு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட சொத்துக்கான பட்டா சரியாக இருக்க வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது.தற்போது, ஒரு சொத்துக்கான பட்டா, யார் பெயரில் உள்ளது என்று மட்டுமே பார்க்கின்றனர். ஆனால், அந்தச் சொத்து எந்தெந்த காலத்தில் எத்தனை பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதையும், மக்கள் அறிய வேண்டியது அவசியமாகிறது.வருவாய் துறையில் பட்டா, நில அளவை வரைபடம் போன்றவற்றை, 'ஆன்லைன்' வழியே, மக்கள் பார்வையிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் போன்ற விபரங்களை அளித்தால், கடைசியாக வழங்கப்பட்ட பட்டா தொடர்பான விபரங்கள் மட்டுமே கிடைக்கும்.அந்த குறிப்பிட்ட சர்வே எண்ணில், இதற்கு முன் வழங்கப்பட்ட பட்டாக்கள் தொடர்பான விபரங்கள் தெரியவந்தால், சொத்து அபகரிப்பு மோசடிகளை தடுக்கலாம். இதற்கு தீர்வாக புதிய வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சொத்துக்களுக்கு சர்வே எண், உட்பிரிவு எண் அடிப்படையில், முந்தைய பத்திரப்பதிவு விபரங்கள், வில்லங்க சான்றாக பதிவுத்துறையில் வழங்கப்படுகிறது. அதுபோன்று, முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை அறிக்கையாக மக்களுக்கு வழங்க, வருவாய் துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:வருவாய் துறையின் மானிய கோரிக்கையின் போது, சட்டசபையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுதொடர்பான மாதிரிகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, வருவாய் துறையில் ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டது வரையிலான விபரங்களை மட்டும், முதல் கட்டமாக வழங்கலாம். படிப்படியாக அதற்கு முந்தைய காலத்து ஆவணங்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும் போது, இதற்கான ஆண்டு களை அதிகரிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. ஆன்லைன் முறையில் ஒருங்கிணைந்த பட்டா பரிமாற்ற பதிவேடு விபரங்கள், மக்களுக்கு விரைவில் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.