மேலும் செய்திகள்
சிவகாசியில் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு
13-Oct-2024
விருதுநகர் மாவட்டம்சிவகாசியில் பட்டாசு தயாரிப்பில் பல்வேறு சிக்கல்கள், சோதனைகள் இருந்தாலும் மக்களைமகிழ்விப்பதற்காக புதுமையானபட்டாசுகளை தயாரிக்கின்றனர்.விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்று வட்டாரப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் நேரடியாக மூன்று லட்சம், மறைமுகமாக 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் மொத்த உற்பத்தியில் 95 சதவீத பட்டாசுகள் இங்குதான் தயாரிக்கப்படுகிறது. எந்தவித பிரச்னையும் இல்லாமல் பட்டாசு உற்பத்தி நடந்து கொண்டிருந்த நிலையில் முதல் முறையாக 2015ல் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என தன்னார்வலர்களால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2018ல் உச்ச நீதிமன்றம், பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது,அதிக ஒலி எழுப்பும் சரவெடி தயாரிக்கக் கூடாது, பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இத்தீர்ப்பின்படியே இப்பகுதியில் பட்டாசு தயாரிக்கப்படுகின்றது. தற்போது தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளில் முன்னர் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்த காற்று மாசினை விட 30 சதவீதம் மாசு குறைவாகவே உள்ளது.அதே சமயத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி பட்டாசு தயாரிக்க துவங்கிய நிலையில் மொத்த உற்பத்தி சதவீதம் குறைய தொடங்கியது. கொரோனா காலகட்டத்தில் பட்டாசு தொழிலுக்கு மீண்டும் சோதனை காலம் துவங்கியது. இந்த காலகட்டத்தில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சுழற்சி முறையில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா சரியான நிலையில் பட்டாசு உற்பத்தி நடந்தாலும் பல்வேறு பிரச்னைகளால் உற்பத்தி சதவீதம் குறைந்து கொண்டே வந்தது. ஏனெனில் பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பதால்,பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த முடியவில்லை, சரவெடி தயாரிக்க முடியவில்லை. இதனால் 80 சதவீதம் வெரைட்டி பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியவில்லை. மக்கள் விரும்புகின்ற பட்டாசுகளை கொடுக்கவும் வழியில்லை.இந்தியா முழுதுமே மக்கள் பட்டாசுகளை விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் விரும்புகின்ற பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியவில்லை என உற்பத்தியாளர்கள் ஆதங்கத்திலும் உள்ளனர். இந்நிலையில் இந்த தீபாவளிக்கும் பல்வேறு பிரச்சனைகளால் 30 சதவீதம் பட்டாசு உற்பத்தி குறைந்து உள்ளது. இப்படி பட்டாசு தயாரிப்பதற்கு எத்தனை சோதனைகள், பிரச்னைகள் வந்தாலும் மக்களை மகிழ்விப்பதற்காக இப்பகுதியில் தொடர்ந்து பட்டாசு உற்பத்தியின் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மக்களை மகிழ்விக்கின்ற வகையில் புதுமையான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றது.
13-Oct-2024