வீராங்கனையருக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்க புது சட்டம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
மதுரை: 'விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை தடுக்க புது சட்டம் கொண்டு வரப்படும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. அரசுக்கு, நீதிபதி பாராட்டு தெரிவித்தார். தென்மாவட்டத்திலுள்ள ஒரு அரசு பள்ளியில் படிக்கும் சிறுமி, கபடி வீராங்கனையாக உள்ளார். தேசிய கபடி போட்டியில் பங்கேற்க, தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான மாநில போட்டிக்கு அச்சிறுமி தேர்வானார். வெளியூரில் நடந்த போட்டிக்கு, சிறுமியை அழைத்து சென்ற உடற்கல்வி ஆசிரியர் ஒருவர், அவருடன் லாட்ஜில் தங்கினார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். அவருக்கு, கீழமை நீதிமன்றம், 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கில், 2024, மார்ச் 19ல் நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: கீழமை நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மாணவிக்கு, 50,000 இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் பெண்களை பாதுகாக்க, பாலியல் ரீதியாக துன்புறுத்துவோரை தண்டனைக்கு உட்படுத்த, புது சட்டம் இயற்ற, தமிழக தலைமை செயலர் ஆறு மாதங்களில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே விசாரணையின் போது அரசு தரப்பு, 'விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் மாணவியரின் பாதுகாப்பு கருதி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சட்டம் இயற்றுவது தொடர்பாக விபரம் பெற அவகாசம் தேவை' என, தெரிவித்தது. நீதிபதி கே.கே.ராம கிருஷ் ணன் நேற்று விசாரித்தார். தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி, 'விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் பெண்களை பாதுகாக்க, பாலியல் ரீதியாக துன்புறுத்துவோரை தண்டனைக்கு உட்படுத்த, புது சட்டம், அடுத்த சட்டசபை கூட்ட தொடரின்போது கொண்டு வரப்படும். 'விளையாட்டு பயிற்சி மையங்கள், விளையாட்டு சங்கங்களின் நடவடிக்கைகள் வரன்முறைப்படுத்தப்படும்' எனக்கூறி, அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்காக, தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி, வழக்கை ஒத்தி வைத்தார்.