உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமேசான், பிளிப்கார்ட்டில் இருந்து ஆர்டர் வந்துருக்கு பிஸியானவர்களைக் குறிவைத்து அரங்கேறும் புது மோசடி 

அமேசான், பிளிப்கார்ட்டில் இருந்து ஆர்டர் வந்துருக்கு பிஸியானவர்களைக் குறிவைத்து அரங்கேறும் புது மோசடி 

கோவை:ஆன்லைன் உலகில் மோசடிகளுக்குப் பஞ்சமேயில்லை. 'இ--காமர்ஸ்', 'குயிக்- காமர்ஸ்' துறைகள் அசுர பாய்ச்சலில் வளர்ந்து வருகின்றன. வேகமான உலகில் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்த உதவும் இந்தத் துறைகளில், எவ்வளவு வசதிகளும், வாய்ப்புகளும் இருக்கின்றனவோ, அதை விட அதிகமாக மோசடி வலைகளும் காத்திருக்கின்றன.இதில் சமீபத்திய வரவு, 'கேஷ் ஆன் டெலிவரி' (சி.ஓ.டி.,) முறையில் வரும், ஆன்லைன் ஆர்டர்கள். அமேசான், பிளிப்கார்ட் போன்ற பிரபல ஆன்லைன் தளங்களில் இருந்து, ஆர்டர் வந்திருப்பதாகக் கூறி பார்சல் வரும்.கணவன் அல்லது மனைவி ஆர்டர் செய்ததாகக் கூறி, நாம் ஆர்டர் செய்யாத பொருளுக்கு, அதிக பணம் பெற்றுக் கொண்டு, பார்சலைக் கொடுத்து மோசடி செய்கின்றனர்.இந்த முறையில் அதிகம் குறிவைக்கப்படுவது, பிஸியாக இருக்கும் மருத்துவமனைகள், நிறுவனங்கள் போன்றவைதான்.உதாரணமாக, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனைக்கு, குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனத்தின் டெலிவரி பாய் போல ஒருவர் வருவார். அந்தக் குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனம், எந்த மாதிரியான பார்சலைத் தருமோ, அதே நிறத்தில், வடிவத்தில், அதன் மீதுள்ள பில்லின் வடிவம் என கொஞ்சமும் சந்தேகம் வராத வகையில், பார்சல் உருவாக்கப்பட்டிருக்கும்.அந்த மருத்துவமனையில், டாக்டரின் மனைவியின் பெயரில் பார்சல் வந்துள்ளதாக கூறி ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை, பணம் வாங்கிக் கொள்கின்றனர். பரபரப்பான நேரம் என்பதாலும், அந்தக் குறிப்பிட்ட முகவரியில், அடிக்கடி ஆன்லைன் ஆர்டர் போடப்படும் என்பதாலும், யாருக்கும் சந்தேகம் எழுவதில்லை.அடிக்கடி அந்த நிறுவனம் அல்லது மருத்துவமனைக்கு ஆன்லைன் ஆர்டர் வருகிறது என்பதை, மோசடிக் கும்பல் தொடர்ந்து கண்காணித்தே, இந்த மோசடியை அரங்கேற்றுகிறது.பார்சலைப் பிரித்துப் பார்த்தால், கொடுத்த பணத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் ஏதேனும் ஆடைகள் வைக்கப்பட்டிருக்கும். அதன் பின்னரே, ஏமாற்றப்பட்டது தெரியவரும். பிஸியான மருத்துவமனை என்பதால், உடனே யாரும் பார்சலைப் பிரித்துப் பார்ப்பதில்லை. இது, மோசடிக் கும்பலுக்கு வசதியாகி விடுகிறது. கண்காணிப்புக் கேமராக்களில் சிக்காமல் இருக்க, மோசடி டெலிவரி பாய்கள், ஹெல்மெட்டைக் கழற்றாமலேயே, டெலிவரி செய்யும் உத்தியைப் பின்பற்றுகின்றனர்.ஏமாறும் தொகை மிகப்பெரியதாக இல்லாமல் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை என்பதாலும், ஏமாற்றப்பட்டதை வெளியில் சொல்லத் தயங்குவதாலும், போலீசில் இதுகுறித்து பெரிதாக யாரும் புகார் செய்வதில்லை. இதுவும், மோசடிப் பேர்வழிகளுக்கு வசதியாகப் போய்விடுகிறது.தனி நபராக இந்த மோசடியை அரங்கேற்றுவது இயலாத காரியம். யாரெல்லாம் அதிகம் குறிப்பிட்ட நிறுவனம் வாயிலாக ஆன்லைன் ஆர்டர் போடுகிறார்கள் என்பதைத் தொடர்ந்து கண்காணித்து, அதே போன்ற பார்சலைத் தயார் செய்வதில், ஒரு கும்பலே ஈடுபட்டால்தான் இது சாத்தியம். இந்த மோசடியில் இருந்து தப்பிக்க விழிப்போடு இருப்பது அவசியம்.

'கிராஸ் செக் பண்ணுங்க'

கோவை மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் கூறியதாவது: இதுவரை, இதுபோன்ற புகார்கள் ஏதும் பதிவாகவில்லை. எவ்வளவு அவசரமாக இருப்பினும் பணம் கைமாறுகிறது எனும்போது 'கிராஸ் செக்' செய்வது அவசியம். 'உங்கள் மகனையோ, மகளையோ கடத்தி விட்டோம். உடனே பணம் தாருங்கள்' என ஒருவர் கூறினால் உடனே பணம் கொடுத்து அனுப்பி விடுவோமா? உண்மையா இல்லையா என்று 'கிராஸ் செக்' செய்வோம்தானே. அதுபோலத்தான் இதுவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை