தமிழக வீட்டு வசதி வாரியத்தின் பல்வேறு கோட்டங்களில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், போலி ஆவணங்கள் வாயிலாக, முறைகேடாக விற்கப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயர் அதிகாரிகள் அலட்சியத்தால், இந்த வழக்குகள் மூடி மறைக்கப்படுவதாக வும் கூறப்படுகிறது.தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும், அவர்களின் வாங்கும் திறனுக்குள், வீடுகள், மனைகள் பெறுவதற்காக, வீட்டுவசதி வாரியம் துவக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், நிலம் கையகப்படுத்தப்பட்டு, திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், குறிப்பிட்ட அளவு நிலங்கள், எதிர்கால தேவைகளுக்காக இருப்பு வைக்கப்பட்டன.இத்தகைய நிலங்கள் தொடர்ந்து, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்த நிலங்களை, அந்தந்த கோட்ட அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள், போலி ஆவணங்கள் தயாரித்து, விற்று, மோசடி செய்ததாககுற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் கிடைத்தா லும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இது குறித்து, வீட்டுவசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில், கே.கே. நகர் கோட்டத்தில், தாம்பரம், அரும்பாக்கம், கே.கே.நகர் போன்ற பகுதி களில், யாருக்கும் ஒதுக்காத, 130 மனைகள் போலி ஒதுக்கீட்டு ஆணைகள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், ஒரு பகுதி மோசடி குறித்து, வீட்டு வசதி வாரியநிர்வாகம், துறை ரீதியாக நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படை யில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நிர்வாக இயக்குனர் மாற்றத்துக்கு பின், இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதேபோல, ஓசூர், கோவை மற்றும் மதுரை கோட்டங்களிலும், நிலமோசடி நடந்தது குறித்த பூர்வாங்க தகவல்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த மோசடிகளில், அபகரிக்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு, தற்போதைய நிலவரப்படி, 500 கோடி ரூபாய் வரை என, மதிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கோப்புகளை அழித்து விட்டதால், இதில், மேலதிகாரிகள் துணையுடன், வழக்குகள் மூடி மறைக்கப்படுகின்றன. துணை முதல்வர், பன்னீர்செல்வம் தலையிட்டு, விசாரணைக்கு உத்தரவிட்டால், வாரியத்தின் சொத்துக்கள் மீட்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.