UPDATED : ஜூன் 03, 2019 01:15 PM | ADDED : ஜூன் 03, 2019 01:06 PM
புதுடில்லி : டில்லி மாநகர பஸ்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்கள் இனி இலவசமாக செல்லலாம் என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.டில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், '' டில்லியில் மாநகர பஸ்களில் தினசரி 8.4 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். மெட்ரோ ரயில்களில் தினமும் 7.5 லட்சம் பெண்கள்பயணிக்கின்றனர். இனி, மாநகர பஸ்கள் மற்றும் ரயில்களில் கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். கட்டணச் செலவை டில்லி மாநில அரசே ஏற்கும். ஒருவேளை, இலவசத்தை விரும்பாத பெண்கள் கட்டணம் செலுத்த விரும்பினால், டிக்கெட் வாங்கியும் பயணிக்கலாம்,'' என்று கூறியுள்ளார்.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், டில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தோற்றது. விரைவில் டில்லி சட்டமன்றத்திற்கு தேர்தல் வருகிறது. இதனை மனதில் வைத்துதான் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த இலவசத்தை அறிவித்துள்ளதாக, விமர்சனங்கள் எழுந்துள்ளன.