உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ராகவசிம்ஹன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:2021 - 2022ம் கல்வியாண்டு முதல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட, ஏழு மொழிகளில் பொறியியல் பயிலலாம் என, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த அறிவிப்பு, கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஊக்குவிக்கும்.பொறியியல் கல்வி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.பள்ளியில் தாய்மொழியில் கல்வி பயின்ற மாணவர்கள், ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டும். இதனால் கிராமப்புற மாணவர்கள், பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை.அதையும் கடந்து, பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள், கல்லுாரியில் பேராசிரியர்கள், தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதை கண்டு மிரண்டு விடுகின்றனர்.ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், அவர்களுக்குள் தாழ்வுமனப்பான்மை குடியேறி விடுகிறது.ஆங்கிலத்தில் பேச முயன்றாலும், தவறு ஏற்படும்போது, சக மாணவர்களால் அவமானப்படுத்தப்படுகின்றனர்.தாய்மொழியில் கல்வி கற்பது, அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். திறமையான பொறியியல் வல்லுனர்கள் உருவாக்கப்படுவர்.ஆனால் தமிழில் படிப்பதால், அந்த மாணவர்களுக்கு தமிழகத்தில் மட்டும் தான் வேலைவாய்ப்பு உண்டு. வெளிமாநிலம், வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்தாலும், அதை பயன்படுத்த முடியாது.நம் மாணவர்கள், நிச்சயம் ஆங்கிலம் அறிந்து கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்ப பாடங்களை, தமிழில் மொழிபெயர்த்து படிப்பதால், கூடுதல் சிக்கல் தான் ஏற்படும்.பொறியியல் கல்லுாரியில், ஆங்கிலம் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட, அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.