உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வாரியத்தில் இனி பேப்பர் கிடையாது: எல்லாம் டிஜிட்டல் மயம்

மின் வாரியத்தில் இனி பேப்பர் கிடையாது: எல்லாம் டிஜிட்டல் மயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட, அனைத்து வகை கோப்புகளையும் கையாளுவதில், வெளிப்படைத்தன்மை ஏற்படுத்த, முழுக்க 'டிஜிட்டல்' முறைக்கு மாறுகிறது, தமிழக மின் வாரியம். நாளை முதல் இது அமலுக்கு வருகிறது.தமிழக மின் வாரியத்தின் கீழ், மின் பகிர்மான கழகம், மின் உற்பத்தி கழகம், பசுமை எரிசக்தி கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. மின் சாதனங்கள் கொள்முதல், கட்டுமானம் உள்ளிட்ட பணிகள், ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக செய்யப்படுகின்றன. இப்பணிகளுக்கு மதிப்பீடு தயாரிப்பது, ஒப்புதல் பெறுவது, அனுமதி அளிப்பது போன்றவற்றுக்கு, காகித கோப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அலுவலர்கள் தயாரித்து, உயர் அதிகாரிகள் வழியாக, மின் வாரியத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவர். இது தவிர, மாவட்ட மற்றும் மண்டல அலுவலகங்களில் செய்யப்படும் முக்கியப் பணிகளுக்கு, தலைமை அலுவலக உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக, தபால் அல்லது பணியாளர்கள் வாயிலாக கோப்புகள் அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்படுகிறது. கோப்புகள் தயாரிக்க, அதிக காகிதம் பயன்படுத்துவதால், செலவு அதிகமாகிறது. கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்வது, கோப்பை வேண்டுமென்றே தொலைத்து விடுவது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன. இதற்காக, 'இ - ஆபிஸ்' எனப்படும் கணினி வாயிலாக கோப்பு கையாளும் முறை, 2021ல் அமல்படுத்தப்பட்டது. எனினும் காகித கோப்பு தொடர்ந்தது. இதை முழுதுமாக தடுக்க, மாவட்ட, மண்டல அலுவலகங்களில் இருந்து, தலைமை அலுவலகத்தில் ஒப்புதல் பெற, காகித கோப்பிற்கு பதில், கணினி வழி நடவடிக்கைகள், நாளை முதல் அமலுக்கு வருகின்றன. இதேபோல், தலைமை அலுவலகத்தில், மதிப்பீட்டிற்கு ஒப்புதல் பெறுவது, அனுமதி அளிப்பது, விஜிலென்ஸ் மற்றும் அமலாக்க பிரிவு கோப்புகள் என அனைத்தும், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், எந்த கோப்பு, எந்த அதிகாரியிடம், எவ்வளவு நேரம் இருந்தது என்பதை அறிய முடியும். தாமதம் செய்யாமல், விரைந்து ஒப்புதல் பெற உதவும் இந்த முறையால், வெளிப்படைத்தன்மை ஏற்படும் என, மின் வாரியம் கருதுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

visu
அக் 31, 2024 13:11

லஞ்சம் ஒழிக்க முடியாதது இல்லை லஞ்சம் வாங்க முயலும் அதிகாரியை காட்டி கொடுப்பவரின் வேலை முன்னுரிமை அளிக்கப்பட்டு தகுதியிருந்தால் முடித்துத்தரப்படும் என்று அறிவித்து பாருங்கள் ஆனால் நடப்பது லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்றும் புகார் அளிப்பவரையும் மாட்டிவிட சட்டம் உள்ளது வற்புறுத்தி லஞ்சம் கொடுத்தாலும் அதிகாரி வாங்கினால் குற்றம்தானே


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 31, 2024 12:26

அட போங்கப்பா, மின்வாரியத்துல கரண்ட்டே இல்லையாம், இவங்க என்னவோ கடுதாசி இல்லைன்னு சொல்லிக்கிட்டு. இனிமே லஞ்சத்தை போன்பே ஜி பே மூலமாத்தான் வாங்குவாங்களாம் கையை தொட்டு நோட்டா வாங்கமாட்டாங்களாம்


sankaranarayanan
அக் 31, 2024 09:50

லஞ்சம் எல்லாமே நெட் பாங்கிங் மூலமாக சென்றுவிடும் யாருக்குமே தெரியாது அவரவர்கள் வங்கி கணக்கில் அவர்களுக்கே தெரியாமல் சென்றுவிடும் வெறும் தகவல் மட்டுந்தான் அவர்களுக்கு வரும் இதுவும் நல்ல யோசனைதான்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 31, 2024 14:39

அண்ணே நீங்க இன்னும் அந்த காலத்து ஆளு மாதிரியே இருக்கீங்க. இப்போவெல்லாம் லஞ்சம் அவங்க அக்கவுண்ட் க்கு போகாது. வேற யாரோட அக்கவுண்டக்கோ போகும். புடிச்சாலும் அவங்க யாருன்னு எனக்கு தெரியாதுன்னு சொல்லிக்கிடலாம். இப்போ எல்லாமே பினாமி தான்.


Kasimani Baskaran
அக் 31, 2024 09:12

லஞ்சம் க்ரிப்டோ மூலமா?


அப்பாவி
அக் 31, 2024 06:39

இனிமே லஞ்சமெல்லாம் கரன்சில வாங்க மாட்டாங்களோ?


Indhuindian
அக் 31, 2024 06:28

நல்ல செய்தி அப்படியே சம்திங் சம்திங் குக்கும் பேப்பர் இல்லாம டிஜிட்டல்ல பண்ணிடுங்க


Prabakaran J
அக் 31, 2024 05:29

including bribes for new line, name transfer, tarrif changes etc - vidiyal gov


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை