நாளை துவங்குது வடகிழக்கு பருவமழை தீபாவளி வரை பல மாவட்டங்களில் கொட்டும்
சென்னை:'தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில், வடகிழக்கு பருவமழை நாளை துவங்கலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, குமரிக்கடல் நோக்கி நகரும் நிலையில், வரும், 19ம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடலில், கேரளா, கர்நாடகா கரையை ஒட்டிய பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். தென்மேற்கு பருவமழை, இந்திய பகுதிகளில் இருந்து ஓரிரு நாட்களில் விலகக்கூடும். அதே சமயம், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தெற்கு உள்கர்நாடகா ஆகிய இடங் களில், இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை நாளை துவங்கலாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தின் இயல்பான மழை அளவு, 44 செ.மீ., ஆனால், இந்த ஆண்டு, 50 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புஉள்ளது. தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் செம்மேடு பகுதியில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதிகளில், 7; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் படகு குழாம், மதுரை மாவட்டம் எழுமலை, தேனி மாவட்டம் தேக்கடி, ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம், விழுப்புரம் ஆகிய இடங்களில், தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்றும், நாளையும் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தீபாவளி வரை, பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.