சாகித்ய அகாடமி விருதுக்கு நுால்கள் வரவேற்பு
சென்னை:சாகித்ய அகாடமி விருதுக்கு, எழுத்தாளர்கள் பிப். 28ம் தேதி வரை நுால்களை அனுப்பலாம். மத்திய கலாசார துறையின் கீழ் செயல்படும், இலக்கிய அமைப்பான சாகித்ய அகாடமி, 1955 முதல், ஒவ்வொரு ஆண்டும் அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட, 24 மொழிகளில் வெளியான, சிறந்த நுால்களுக்கு, சாகித்ய அகாடமி விருது வழங்குகிறது.விருதாளர்களுக்கு, சாகித்ய அகாடமி, 'லோகோ'வுடன் கூடிய கேடயம், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருதுக்கு, 2019 ஜனவரி முதல், 2023 டிசம்பர் வரை, முதன் முதலில் வெளியிடப்பட்ட புத்தகங்களை, எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், அல்லது எழுத்தாளரின் நலம் விரும்பிகள், நுாலின் ஒரு படியை, பிப். 28ம் தேதிக்குள், சாகித்ய அகாடமி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும், சாகித்ய அகாடமி விருதுக்கான விதிகளை www.sahitya-akademi.gov.inஎன்ற இணையதளத்தில் அறியலாம்.