உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுப்பூதிய முறையை கைவிடக்கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தொகுப்பூதிய முறையை கைவிடக்கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழக சத்துணவு திட்டத்தின் கீழ், 8,000க்கும் மேற்பட்ட சமையலர் பணியிடங்களை, தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்புவதை கைவிடக்கோரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சமூக நலத்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநில தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, சத்துணவு ஊழியர்கள் தொகுப்பு ஊதிய முறையை கைவிடக்கோரி, கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து, சந்திரசேகரன் கூறியதாவது:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1982ம் ஆண்டு முதல் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த, 30 ஆண்டு கால தொடர் போராட்டத்திற்கு பின், சத்துணவு ஊழியர்களுக்கு மதிப்பூதியத்தில் இருந்து, சிறப்பு கால ஊதிய முறை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில், 8,997 சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, கடந்த 16ம் தேதி வெளியிட்டது. இது, சத்துணவு ஊழியர்கள், 30 ஆண்டு காலம் போராடி பெற்ற சிறப்பு கால ஊதிய முறையை, மீண்டும் தொகுப்பு ஊதியம் என்ற கொத்தடிமை கூலி முறைக்கு கொண்டு செல்வதற்கான வழியாக உள்ளது. முதல்வரின், தேர்தல் வாக்குறுதிக்கு எதிராகவும் அமைந்துஉள்ளது. எனவே, தொகுப்பு ஊதிய முறையில், ஊழியர்கள் நிரப்பப்படுவதை, தமிழக அரசு கைவிட வேண்டும். சத்துணவு திட்டத்தில், உள்ள 60,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 18ம் தேதி, மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ