உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீக்கிரையாகும் ஆம்னி பஸ்கள்: நடவடிக்கை எடுப்பது எப்போது?

தீக்கிரையாகும் ஆம்னி பஸ்கள்: நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஆம்னி பஸ்கள் விபத்துக்குள்ளாகி, முழுவதும் எரிந்து தீக்கிரையாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. தூக்கத்திலேயே அப்பாவிகளின் உயிர்கள் கருகும் சம்பவத்தை தவிர்க்க, ஆம்னி பஸ்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.சென்னையிலிருந்து கோவை, சேலம், மதுரை, பெங்களூரு, நெல்லை, கன்னியாகுமரி உட்பட தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு, 500க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளைக் கவர ஆரம்பத்தில், 'புஷ் பேக்', 'செமி சிலீப்பர்' என்று இயக்கப்பட்ட பஸ்களை, தற்போது தூங்கும் வசதி கொண்ட படுக்கைகள், முழுவதும் குளிரூட்டப்பட்ட, 'ஏசி' பஸ்களாக இயக்கி வருகின்றனர்.

கட்டணம் அதிகம் என்றாலும், சொகுசு பயணத்திற்காக பொதுமக்கள் ஆம்னி பஸ்களை நாடத் துவங்கி விட்டனர். வார விடுமுறை நாட்கள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், ஆம்னி பஸ்களில் இடம் கிடைக்காத அளவிற்கு, கூட்டம் அலைமோதும்.இந்த நிலையில், அவ்வப்போது நடக்கும் விபத்துகளில் சிக்கும் ஆம்னி பஸ்கள், தீக்கிரையாகி, அப்பாவி பயணிகள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே, சாம்பலாகி விடுகின்றனர். கடந்த ஜூன், 8ம் தேதி, சென்னையில் இருந்து திருப்பூருக்கு சென்ற தனியார் ஆம்னி பஸ், வேலூர் மாவட்டம் ஓச்சேரி அருகே விபத்துக்குள்ளாகி, பள்ளத்தில் கவிழ்ந்தது. கவிழ்ந்த வேகத்தில், தீ பற்றி எரிந்ததில், பஸ்சில் பயணித்த, 22 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவ்வப்போது ஆம்னி பஸ்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தாலும், இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. போக்குவரத்துத் துறை விழித்துக் கொண்டு, உடனடியாக ஆம்னி பஸ்களை சோதனை செய்தது. சில பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த, 5ம் தேதி கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து பெங்களூருக்கு சென்ற ஆம்னி பஸ், கோவை அருகே லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய உடன் பஸ் தீப்பற்றி எரிந்தது. பயணிகள் அனைவரும் தப்பித்தாலும், டிரைவர் மட்டும் தீயில் கருகி உயிரிழந்தார்.

இதனால், ஆம்னி பஸ்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக ஆம்னி பஸ்களில், சாதாரண பஸ்களில் இருப்பது போல், இரண்டு படிக்கட்டுகள் இருப்பதில்லை. டிரைவருக்கு அருகில் ஒரே ஒரு படிக்கட்டு இருக்கும். அங்கு, டிரைவர் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில், 'ஹைட்ராலிக்' கதவு இருக்கும். டிரைவர் இயக்கினால் மட்டுமே அந்த கதவு திறக்கும் அல்லது மூடும்.'ஏசி' பஸ்களில், காற்று வெளியேறாத வகையில் பக்கவாட்டு ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். விபத்து சமயங்களில் பயணிகள் உடனடியாக வெளியேறாத வகையில், 'எமர்ஜென்சி கதவு' எங்கேயிருக்கிறது என்பதே தெரியாது. அந்த வகையில், ஆம்னி பஸ்களின் கட்டுமானம் இருக்கிறது.இந்த நிலையில், வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சைலேந்திரபாபு தலைமையில், ஆம்னி பஸ்களில் பயணிகள் எளிதில் தப்பிப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில், ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என, பண்டிகை காலங்கள் துவங்கவுள்ளன. அப்போது, ஆம்னி பஸ்களில் பயணிகள் அதிகளவில் பயணிப்பர். அதற்குள், போலீசார் வழங்கியுள்ள இந்த பாதுகாப்பு வசதியை, போக்குவரத்து அதிகாரிகள் பரிசீலனை செய்து, ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் கலந்து பேசி, பின்னர் ஆம்னி பஸ்களில், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயணிகள் தப்பிக்கதேவையான வசதிகள்ஆம்னி பஸ்களில் பயணிகளுக்கு, என்னென்ன பாதுகாப்பு வசதிகள் வேண்டும் என்பது குறித்து, வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் நடந்த ஆம்னி பஸ் விபத்திற்கு காரணம், டிரைவரின் அதிக வேகம் மற்றும் பஸ்சில் பயணிகள் எளிதில் தப்பிக்கும் வழி இல்லாதது தான் என தெரிந்தது. இதையடுத்து, சொகுசு பஸ்கள் விபத்திற்குள்ளானால், பயணிகள் தப்பிப்பதற்கு பஸ்சின் கட்டமைப்பை மாற்றுவது குறித்து, போலீஸ் தடவியல் மற்றும் அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தினோம். இதில், டிரைவருக்கு அருகில் ரிமோட் மூலம் இயங்கும் கதவை மாற்றி, பயணிகள் எளிதில் திறக்கும் வகையில் அமைக்க வேண்டும்; பஸ்சின் பின்புறம், பஸ்சின் மேற்கூரை ஆகிய இடங்களிலும், விபத்து நடந்தால், எளிதில் திறக்கும் வகையில் ஆபத்து கால கதவுகள் அமைக்க வேண்டும்; சிறிய அளவிலான, தீயணைப்பு நுரைப்பான்களை (போம் சிலிண்டர்கள்) அதிகம் வைக்க வேண்டும். பயணிகள் சீட்டின் அமைப்பையும், எளிதில் வெளியேறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையினை தயாரித்து, அரசுக்கு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு ஐ.ஜி., சைலேந்திரபாபு கூறினார்.- வீ.அரிகரசுதன் --நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ