இதே நாளில் அன்று
நவம்பர் 4, 1889ராஜஸ்தான் மாநிலம், சிகார் அருகில் உள்ள காஷி கா பாஸ் என்ற கிராமத்தில், 1889ல் இதே நாளில் பிறந்தவர் ஜம்னாலால் கனிராம் பஜாஜ். இவரை சிறு வயதிலேயே, தொழிலதிபரான சேத் பச்சராஜ் பஜாஜ் தத்தெடுத்து, வர்த்தகத்தை கற்பித்தார். அவர் மறைந்ததும் இவர், பஜாஜ் தொழில் குழுமத்தை நிறுவினார்.முதல் உலகப் போரின்போது, இவரிடம் பிரிட்டிஷ் அரசு நிதி பெற்றது. அதற்காக, இவருக்கு, 'ராவ் பகதுார்' பட்டம் வழங்கியது. காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். ராவ் பகதுார் பட்டத்தை துறந்து, தண்டி யாத்திரை உள்ளிட்டவற்றில் பங்கேற்றார்.நாடு முழுதும், ஹிந்தி பிரசார சபாவை நிறுவினார். தன் குடும்ப கோவிலான லட்சுமி நாராயண் மந்திரில், தாழ்த்தப்பட்டவர்களும் வழிபட அனுமதித்தார். 'பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ், பஜாஜ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்' உள்ளிட்டவற்றை நிறுவியதுடன், பஜாஜ் அறக்கட்டளையையும் துவங்கிய இவர், 1942, பிப்ரவரி 11ல், தன் 53வது வயதில் மறைந்தார்.நாட்டில் தொழிற்புரட்சியை ஏற்படுத்திய, 'பஜாஜ்' பிறந்த தினம் இன்று!