உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2029க்கு பிறகே! ஒரே நாடு ஒரே தேர்தல் நிர்மலா சீதாராமன் பேச்சு

2029க்கு பிறகே! ஒரே நாடு ஒரே தேர்தல் நிர்மலா சீதாராமன் பேச்சு

செங்கல்பட்டு, :''ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை நாட்டின் நலன் கருதி கொண்டு வரப்படவுள்ளது. அதுவும், 2029ம் ஆண்டுக்கு பிறகே அமலுக்கு வரவுள்ளது. இந்த தேர்தல் முறையின் முக்கியத்துவம் குறித்து மாணவ - மாணவியர், தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு எடுத்து கூறவேண்டும்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறை குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.எம்., நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பாரிவேந்தர் வரவேற்றார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ., சமூக ஊடகப்பிரிவு மாநில தலைவர் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்து, 10 ஆண்டுகளாக பல மேடைகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டில், அரசியல் ரீதியாக சில விஷயங்கள் கண்மூடித்தனமாக நடைபெற்று வருகின்றன. நாட்டின் நலனுக்காக எடுக்கப்படும் சில முடிவுகளுக்கு, ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மூன்று முறை

அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால், மாநிலத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும். கடந்த 1960 வரை ஒரே தேர்தலாக நடத்தப்பட்டது. 1961 முதல், 1970 வரையிலான 10 ஆண்டுகளில், பீஹார், கேரளா, பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மூன்று முறை தேர்தல் நடைபெற்றது.ஒரே நாடு ஒரே தேர்தல் முறையானது, பிரதமர் மோடியும், நான்கு அதிகாரிகளும் சேர்ந்து எடுத்த முடிவு அல்ல. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு எடுத்த முடிவு. இந்த தேர்தல் முறையை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம். நாட்டின் நலனுக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வரும் 2029 லோக்சபா தேர்தலுக்கு பிறகே, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான நடைமுறையை ஜனாதிபதி துவக்கி வைக்க உள்ளார். இதற்காக, 82ஏ, 83(7) சட்ட திருத்தங்கள் வர உள்ளன. இவற்றின் வாயிலாக தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் கிடைக்கும். 2034க்கு முன், இந்த தேர்தல் முறை அமலுக்கு வர சாத்தியம் இல்லை. கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது.

கருணாநிதி ஆதரித்தார்

இதை ஒரே தேர்தலாக நடத்தினால், 12,000 கோடி ரூபாய் சேமிப்பாகும். இதை மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் சுயசரிதையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆதரித்துள்ளார். ஆனால், தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தந்தை சென்ற பாதையில் செல்லாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த தேர்தல் முறையின் முக்கியத்துவம் குறித்து மாணவ - மாணவியர் தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழிசை பேசியதாவது:

மாணவ செல்வங்கள் மத்தியில், ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தை எடுத்துச் செல்லும் வகையில் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. அடிக்கடி தேர்தல் வரும் போது தேவையற்ற செலவுகள் ஏற்படுகின்றன. குடும்ப கட்டுப்பாடு போல தேர்தல் கட்டுப்பாடும் மிகவும் அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை