சென்னை:ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும், அதிக கோதுமை வழங்குவதாக புகார் எழுந்து உள்ளது. இந்த பணியை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் கோதுமை ஒதுக்கியும் பலருக்கு கிடைப்பதில்லை. தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி, தங்களுக்கு உரிய அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட அளவு அரிசிக்கு பதிலாக, கோதுமை வாங்கி கொள்ளலாம். 17,100 டன்
சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், ஒரு கார்டுதாரருக்கு மாதம், 10 கிலோவும்; மற்ற இடங்களில் வசிப்பவருக்கு, 5 கிலோவும் கோதுமை வழங்கப்பட்டன. இதற்காக மாதம் சராசரியாக, 13,500 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. கடந்த 2023ல் கோதுமை ஒதுக்கீடு மாதம், 8,500 டன்னாக குறைக்கப்பட்டது. இதனால் ஒருவருக்கு, 2 கிலோ வரை வழங்கப்பட்டது. இதுவும் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. தமிழக அரசின் தொடர் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் கோதுமை ஒதுக்கீட்டை மாதம், 17,100 டன்னாக மத்திய அரசு உயர்த்தியது. அதற்கு ஏற்ப கார்டுதாரர்களுக்கு கூடுதல் கோதுமை வழங்க, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உத்தரவிட்டது. ஆனாலும், பெரும்பாலான கடைகளில், ஊழியர்கள் தங்களுக்கு வேண்டிய கார்டுதாரர்களுக்கு மட்டுமே, அதிகளவில் கோதுமை வழங்குகின்றனர். இதனால், பலருக்கு கோதுமை கிடைப்பதில்லை. இதுகுறித்து, கார்டுதாரர்கள் கூறியதாவது:மாதத்தின் முதல் வாரத்தில் ரேஷன் கடைக்கு சென்று கோதுமை கேட்டாலும், 2 கிலோவுக்கு மேல் தருவதில்லை. அரிசி வாங்காமல், அதை, 'பில்' போட்டு எடுத்துக் கொள்ளுமாறு கூறும் கார்டுதாரர்களுக்கு மட்டும், 5 கிலோ வரை கோதுமை வழங்குகின்றனர். அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். சமமான ஒதுக்கீடு
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மண்டலம், வட்ட அளவில் உள்ள உணவு துறை அதிகாரிகள், தங்களின் கணினியிலேயே கார்டுதாரருக்கு வழங்கப்பட்ட பொருட்களின் விபரங்களை பார்க்க முடியும். அதன் வாயிலாக, தொடர்ந்து அதிக கோதுமை வழங்கப்படும் நபர்களை கணக்கெடுத்து விசாரணை நடத்த வேண்டும். இதனால், அனைவருக்கும் சமமான ஒதுக்கீட்டை வழங்க முடியும்.இதை சரிவர அதிகாரிகள் செய்யாததால், சிலருக்கு மட்டும் அதிக கோதுமை கிடைக்கிறது; பலருக்கு கிடைப்பதில்லை. எனவே, ரேஷன் கடைகளில் அதிகாரிகளின் கள ஆய்வை உயரதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.