உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரை அழைக்க எதிர்ப்பு: சி.பி.ஆர்., பாராட்டு விழா ரத்து

முதல்வரை அழைக்க எதிர்ப்பு: சி.பி.ஆர்., பாராட்டு விழா ரத்து

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சென்னையில் நடக்க இருந்த பாராட்டு விழாவுக்கு, முதல்வர் ஸ்டாலினை அழைக்க பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவ்விழா ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின், முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன், நான்கு நாள் பயணமாக, அக்., 27ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டது. அது திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப் படுகிறது. இதற்கான காரணம் குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, சென்னை மக்கள் அமைப்பு சார்பில், அக்., 27ம் தேதி பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, நடிகர் ரஜினியை அழைக்க முடிவு செய்தனர். முதல்வர் ஸ்டாலினை அழைத்தால், பழனிசாமி வரமாட்டார். எனவே, ஸ்டாலினை அழைக்க வேண்டாம் என, பா.ஜ., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 'சி.பி.ராதாகிருஷ்ணன் அரசியல்வாதி அல்ல; அவர் துணை ஜனாதிபதி. எனவே, முதல்வர் ஸ்டாலினை அழைப்பதில் தவறிவில்லை' என, விழா ஏற்பாட்டாளர்கள் வாதிட்டனர். ஆனால், முதல்வரை அழைக்கக்கூடாது என்ற எதிர்ப்பு வலுத்துள்ளதால், அவ்விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்., 28ல் கோவை செல்லும் சி.பி.ராதாகிருஷ்ணன், அங்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். மேலும், பேரூர் மடத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். 29ம் தேதி திருப்பூர் சென்று, தன் தாயாரை சந்தித்து ஆசி பெற உள்ளார். அங்கும் அவருக்கு பாராட்டு விழா நடக்கிறது. அக்., 30ம் தேதி மதுரை செல்லும் அவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இவ்வாறு தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை