வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு வருமான வரி கூடாது என எதிர்ப்பு
சென்னை; 'தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வருமான வரித்துறை கட்டுப்பாட்டிற்குள் செல்ல அனுமதிக்க கூடாது' என, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:காவிரி டெல்டா மாவட்டங்களில், 267 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவை, விவசாயிகளின் பங்கு தொகையை மூலதனமாக கொண்டு செயல்படுகின்றன. சங்கங்களுக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்று, மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென வருமான வரித்துறை மதுரை மண்டல முதன்மை ஆணையர், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், 267 சங்கங்களின் கூட்டத்தை நடத்தி, வருமான வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை எடுத்துரைத்துள்ளார். இதன் வாயிலாக, அனைத்து சங்கங்களும் வரித்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது. இதை அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.