போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 14வது ஒப்பந்த பலன் வழங்க உத்தரவு
சென்னை:'போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 14வது ஒப்பந்த பலன் வழங்க வேண்டும்' என போக்குரவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அறக்கட்டளைக்கு அனுப்பியுள்ள கடிதம்: போக்குவரத்துக் கழகங்களில், 2019ம் ஆண்டு செப்., முதல் 2022ம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, 14வது ஊதிய ஒப்பந்தத்துக்கான பலனை வழங்கும் வகையில், ஓய்வூதியத் தொகையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இவர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகையை நிர்வாகக் குழுவின் ஒப்புதல் பெற்று, ஓய்வூதிய அறக்கட்டளையின் நிதிநிலைக்கு ஏற்ப, தவணை முறையில் வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகையை வழங்க, அரசிடம் இருந்து நேரடியாகவோ, மறைமுகவோ நிதியுதவி கோரக் கூடாது. இந்த வழிகாட்டுதல்கள் அடிப்படை ஓய்வூதியத் தொகைக்கானது மட்டுமே தவிர, அகவிலைப்படிக்கு பொருந்தாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, போக்குவரத்து ஓய்வூதியர்கள் கூறியதாவது: கடந்த 2003 ஏப்ரலுக்கு பின் ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. இதனால், அவர்களிடம் ஓய்வூதியத்துக்கான பங்களிப்பை அறக்கட்டளையால் பெற முடியாது. அப்படியிருக்கும்போது, ஓய்வூதிய அறக்கட்டளைக்கு நிதி எங்கிருந்து வரும்?மேலும், ஓய்வூதிய அறக்கட்டளைக்கு எப்போதெல்லாம் நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அரசும் நிர்வாகமும் அதை ஈடு செய்ய வேண்டும் என்று, ஒப்பந்தத்தில் உள்ளதை அரசும், நிர்வாகமும் செயல்படுத்த முன்வர வேண்டும். அப்போதுதான் ஒப்பந்த பணப் பலன்களை பெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.