உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆக்கிரமித்த மேய்க்கால் நிலத்தை ஒப்படைக்க நிறுவனத்துக்கு உத்தரவு

ஆக்கிரமித்த மேய்க்கால் நிலத்தை ஒப்படைக்க நிறுவனத்துக்கு உத்தரவு

சென்னை:வேதாரண்யம் அருகே, ஆக்கிரமிப்பு செய்த மேய்க்கால் நிலத்தை, தனியார் நிறுவனம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாகை மாவட்டம், வேதாரண்யம் கடிநல்வயல் கிராமம் அருகே, 3,000 ஏக்கரில், 'குஜராத் கெமிக்கல்ஸ் சால்ட்' என்ற தனியார் நிறுவனம் உள்ளது. கடிநல்வயல் கிராமத்தை ஒட்டியுள்ள பன்னாள், ஆயக்காரன்புலம், பஞ்சநதிகுளம் ஆகிய கிராம நிலங்களின் ஒட்டி, இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில், 10 ஏக்கர் மேய்க்கால் நிலத்தை, இந்த நிறுவனம் ஆக்கிரமித்து உள்ளதால், அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என, 2015ல் கடிநல்வயல் கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடிநல்வயல் கிராம பஞ்சாயத்தின் அப்போதைய தலைவர் மலர்விழி வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,'வேதாரண்யம் தாசில்தார், சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்து, அந்த நிறுவனத்துக்கு விதிக்க வேண்டிய வரியை கணக்கிட்டு, கலெக்டருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்' என, உத்தரவிட்டது.இந்த உத்தரவின்படி, தாசில்தார் கள ஆய்வு செய்து, 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது; நிறுவனத்திடம் இருந்து 47 லட்சம் ரூபாய் வரியையும் வசூலிக்க வேண்டும் என, கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார். பின், அந்த நிலத்தை ஒப்படைக்கும்படி, குஜராத் நிறுவனத்துக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.அந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், குஜராத் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.வழக்கில் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மலர்விழியும், தன்னை எதிர் மனுதாரராக இணைத்து கொண்டார்.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,' அந்த தனியார் நிறுவனம், சம்பந்தப்பட்ட நிலத்தை ஒப்படைக்க வேண்டும்' என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்