சென்னை : முஸ்லிம் மதத்திற்கு மாறும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மக்களை, முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்து, ஜாதி சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 2012 வரை, பிற மதங்களில் இருந்து, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம் மதத்திற்கு மாறினால், அவர்கள் ஏற்கனவே பெற்ற ஜாதி சான்றிதழ் மாற்றப்பட்டு, முஸ்லிம் ராவுத்தர் அல்லது லப்பை என, புதிய ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதன் வழியே, பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் என, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உரிமை அளிக்கப்பட்டது. ஆனால், 2012க்கு பின் மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை.முன்னர் போல, முஸ்லிமாக மதம் மாறிய, பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்களை, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினராகக் கருதி, ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என, முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தின. அதை, தமிழக அரசு ஏற்று, நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2008 ஜூலை 29ல் வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள, ஏழு முஸ்லிம் பிரிவுகளில், மதம் மாறுவோர் விரும்பும் ஒரு பிரிவை குறிப்பிட்டு, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் என, ஜாதி சான்றிதழ் வழங்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், முஸ்லிம் மதத்திற்கு மாறுவோர், கல்வி, வேலை வாய்ப்பில், 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற வாய்ப்புள்ளது.