அழகிரி உட்பட 21 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
மதுரை : மேலூர் அருகே, சட்டசபைத் தேர்தலின் போது, அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் மிரட்டியதாகப் பதிவான வழக்கில், தி.மு.க., மத்திய அமைச்சர் அழகிரி உட்பட 21 பேர் மீது, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கீழவளவு அருகே, அம்பலக்காரன்பட்டியில், சட்டசபைத் தேர்தலின் போது, ஏப்.,1ல் வல்லடிக்காரன்கோயிலில், தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதை, தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள், வீடியோ எடுக்க முயன்ற போது பிரச்னை ஏற்பட்டது. தேர்தல் அதிகாரி காளிமுத்து தாக்கப்பட்டார்.
இதுகுறித்து, அழகிரி, துணை மேயர் மன்னர், மேலூர் ஒன்றியச் செயலர் ரகுபதி, திருஞானம் மீது கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், தான் தாக்கப்படவில்லை என, காளிமுத்து மறுத்தார். இருப்பினும், ஆட்சி மாற்றத்திற்குப் பின், இவ்வழக்கை மீண்டும் போலீசார் விசாரித்தனர். இவ்வழக்கில், மத்திய அமைச்சர் அழகிரி, துணை மேயர் மன்னன், ஒன்றியச் செயலர் ரகுபதி, திருஞானம், மற்றொரு திருஞானம், செந்தில், கருப்பணன், பொன்னம்பலம், ராமலிங்கம், நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், சோலை, போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் மீது இன்ஸ்பெக்டர் மாடசாமி, நேற்று முன் தினம் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள், 147 - கலகம் விளைவித்தல், 332 - பொது ஊழியரைத் தடுத்து காயம் ஏற்படுத்துதல், 353 - பொது ஊழியர் மீது வன்முறைத் தாக்குதல், 188 - பொது ஊழியர் கட்டளைக்கு கீழ்படியாமை, 114 - உடந்தை, 149 - சட்ட விரோதமாகக் கூடுவது ஆகிய பிரிவுகளின் கீழ், குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காளிமுத்து, துணை தாசில்தார் முத்துராமலிங்கம் உட்பட, 26 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.