உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டீ கடை பெஞ்ச்: மணல் கடத்தல் கும்பலை பாதுகாக்கும் பி.ஏ.,

டீ கடை பெஞ்ச்: மணல் கடத்தல் கும்பலை பாதுகாக்கும் பி.ஏ.,

''பம்பரமா சுத்தி வர்றாங்க பா...'' என, ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாரு, என்னன்னு சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''முதல்வர் ஸ்டாலின், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தை சமீபத்துல அறிவிச்சாரே... இத்திட்டப்படி, ஒவ்வொரு கலெக்டரும், மாசத்துல ஒருநாள் ஒரு தாலுகாவுல தங்கி, மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கணும் பா...''பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் கற்பகம், காலை 7:00 மணிக்கே களத்துக்கு போய், மறுநாள் காலையில, 9:00 மணி வரைக்கும் தங்குறாங்க...''பெரும்பாலும் கிராம பகுதிகள்ல முகாமிடும் அவங்க, காலை உணவு திட்டம், பால் சொசைட்டி, ரேஷன் கடைகள், தெருவிளக்கு, குடிநீர், கழிவுநீர் வாய்க்கால் வசதி களை ஆய்வு செஞ்சு, உடனே நடவடிக்கை எடுக்குறாங்க பா...''குறிப்பா, விவசாயிகள், விதவைகள், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், இருளர், நரிக்குறவர்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தந்து, தீர்த்து வைக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''விபத்து வழக்குகள்ல புகுந்து விளையாடறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''சென்னை, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், பொத்தேரியில இயங்கறது... கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், ஓட்டேரி, மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகள்ல நடக்கற சாலை விபத்துகளை இங்கதான் விசாரிக்கறா ஓய்...''இங்க இருக்கற ரெண்டு அதிகாரிகள், விபத்து வழக்குகளை தாங்கள் சொல்ற வக்கீல்களிடம் தான் தரணும்னு நெருக்கடி தரா... விபத்துல பொருட்கள், உறவினர்களை இழந்து சோகத்தோட வரவாளால, இதை மறுக்க முடியல ஓய்...''இதுல ஒருத்தரது வாரிசே வக்கீலா இருக்கறதால, பெரும்பாலான வழக்குகளை தன் மகனிடம் தள்ளி விடறார்... விபத்துல சிக்கற வாகனங்களை திருப்பி தரவும், கணிசமான தொகையை கறந்துடறா... இவாளுக்கு ஒரு ஏட்டு ஒத்தாசையா இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''வடிவேல், சரவணன், அன்பு எல்லாம் வர்றாவ... சுக்கு காபி போடும் நாயரே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''அதிகாரியை துாக்கி அடிப்பேன்னு சவால் விட்டிருக்காருல்லா...'' என்றார்.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''திருப்பூர் மாவட்டத்துல, முக்கிய புள்ளிக்கு பி.ஏ.,வா இருக்கிறவர், மணல் கடத்தல் கும்பலுக்கு பாதுகாவலரா இருக்காரு... சமீபத்துல, தாராபுரத்தில் இருந்து அனுமதி பெறாம, கிராவல் மண் ஏத்திட்டு வந்த டிப்பர் லாரியை, இளம் ஆர்.ஐ., ஒருத்தர் மடக்கி பிடிச்சாரு வே...''லாரியில ரெண்டு பக்கமும் நம்பர் பிளேட்டும் இல்ல... உடனே, முக்கிய புள்ளியின் பி.ஏ.,வுக்கு தகவல் போயிட்டு வே...''ஆர்.ஐ., மொபைல் போனுக்கு வந்த பி.ஏ., 'அவங்க நம்மாளுங்க தான், விட்டுருங்க'ன்னு கூலா சொல்லியிருக்காரு... ஆர்.ஐ., 'அதெல்லாம் முடியாது'ன்னு மறுத்திருக்காரு வே...''போனை வச்ச பி.ஏ., மாவட்ட கனிமவள உயர் அதிகாரி வழியா அழுத்தம் தந்திருக்காரு... இதனால, ஆர்.ஐ.,யும் வேற வழியில்லாம லாரியை விடுவிச்சிட்டாரு... தன் முயற்சியில பி.ஏ., ஜெயிச்சிட்டாலும், 'என் பேச்சை கேட்காத ஆர்.ஐ.,யை மாத்தி காட்டுதேன்'னு சவால் விட்டிருக்காரு வே...'' என்ற அண்ணாச்சியே, ''வினோத், எக்சாம் எல்லாம் நல்லா எழுதுதியா...'' என, தெருவில் சென்ற சிறுவனிடம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி