திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நிறைவடைந்த நிலையிலும் தினமும் பாதயாத்திரையாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு, எடப்பாடியை சேர்ந்த காவடி பக்தர்கள் நேற்று வந்தனர். ஈரோட்டிலிருந்து காவடி எடுத்து வந்த பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், எடப்பாடியிலிருந்து காவடி எடுத்து வந்த பக்தர்களும் உள்ளே நுழைய முயன்றனர். பக்தர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அங்கிருந்த கோயில் ஊழியர்கள், பாதுகாவலர்கள் பக்தர்களுடன் வாக்குவாதம் செய்ய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் எடப்பாடியை சேர்ந்த பக்தர் சந்திரன் தலையில் காயம் ஏற்பட்டது. கோயில் வெளிப்பிரகாரத்தில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.பக்தரை கோயில் ஊழியர்கள் வெளிப்பிரகாத்திற்கு அழைத்து வந்து தாக்கி காயம் ஏற்படுத்தியதாக கூறி, அங்கு திரண்ட பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., சுப்பையா தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் பக்தர்கள் சமாதானம் அடைந்தனர். மேலும் இதில் தொடர்புடைய கோயில் ஊழியர்கள் மன்னிப்பு கேட்டதால் பக்தர்கள் கலைந்து சென்றனர்.கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஊழியர்களால் தாக்கப்படுவது அடிக்கடி நடக்கிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதில் ஈடுபடும் கோயில் ஊழியர்கள் மீது நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்
பொட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் முத்துராஜா 20. அங்குள்ள தனியார் கல்லுாரியில் பணிபுரிந்துள்ளார். இவரும், மாமா மகன் அஜித்தும் 20, கடந்த 2014 டிச.14 ல் பொட்டப்பாளையம் அருகே குசவபட்டி ரோட்டில் உள்ள குழாயில் குளித்துள்ளனர். அந்த வழியாக வந்த பாட்டம் கிராமத்தை சேர்ந்த முத்து விஜி , பால்பாண்டி 35, பிரசாந்த் 28 மற்றும் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேரும் தகராறு செய்து அஜித்தையும் முத்துராஜாவையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் முத்துராஜா உயிரிழந்தார்.திருப்புவனம் போலீசார் சிறுவன் உட்பட நான்கு பேரையும் கைது செய்தனர். இதில் சிறுவனை தவிர மற்ற மூன்று பேர் மீதான வழக்கானது சிவகங்கை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு நடக்கையில் முத்துவிஜி இறந்தார். விசாரித்த நீதிபதி சத்யதாரா குற்றவாளிகளான பால்பாண்டி, பிரசாந்திற்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் பிரபாகர் ஆஜரானார்.சிறுமி பலாத்கார வழக்கு: மூவருக்கு 90 ஆண்டு சிறை
கேரள மாநிலம் கஜானா பாறையில் ஏலத்தோட்டத்தில் வேலை செய்யும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியினரின் 15 வயது மகள், ஆண் நண்பருடன் 2022 மே 29ல் பூப்பாறைக்குச் சென்றார். அங்கு தேயிலை தோட்டம் அருகே பேசிக் கொண்டிருந்த சிறுமியை பூப்பாறை லட்சம் காலனியைச் சேர்ந்த சாமுவேல் 22, அரவிந்த், பூப்பாறைக்கு பணிக்கு வந்த தேனி மாவட்டம் போடி தர்மத்துபட்டியைச் சேர்ந்த சிவகுமார் 19, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா வலவூரைச் சேர்ந்த சுகந்த் 22, இரு சிறுவர்கள் ஆகியோர் ஆண் நண்பரை அடித்து விரட்டிவிட்டு சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சாந்தாம்பாறை போலீசார் ஆறு பேரையும் கைது செய்தனர்.தொடுபுழா சிறார் நீதிமன்றத்தில் இரு சிறுவர்கள் மீதான வழக்கு நடந்து வருகிறது. மீதமுள்ள நான்கு பேர் மீதான வழக்கு, தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மூன்று பேருக்கு தலா 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கில் அரவிந்துக்கு மட்டும் தொடர்பு இல்லை எனக் கூறி அவரை நீதிபதி விடுவித்து உத்தரவிட்டார்.குடும்பத்தினரை எரிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது
வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 49, முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சுகந்தி, 42. இவர்களுக்கு, இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறால் கணவரை பிரிந்து, சுகந்தி குழந்தைகளுடன், அதே கிராமத்திலுள்ள தாய் வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வசிக்கிறார்.இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், தட்சணாமூர்த்தி குழந்தைகளை பார்க்க அவ்வப்போது மாமியார் வீட்டிற்கு வந்து செல்வார். நேற்று முன்தினம் அவர் குழந்தைகளை பார்க்க மது போதையில் சென்றார். அப்போது, தட்சணாமூர்த்திக்கும், சுகந்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை மாமியார் குடும்பத்தினர் சமாதானம் செய்ய முயன்றனர்.அதை ஏற்காமல், மனைவி, இரு குழந்தைகள், மாமியாரை வீட்டின் உள்ளே வைத்து வெளிப்பக்கமாக பூட்டிய தட்சணாமூர்த்தி, வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த சுகந்தியின் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்தபோது, தட்சிணாமூர்த்தி அங்கிருந்து தப்பினார். கே.வி.குப்பம் போலீசார், தட்சணாமூர்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.குடும்ப தகராறில் வாலிபரை கொன்றவர் கைது
வேலுார் மாவட்டம், ஓடுகத்துார் அடுத்த ஓங்கபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம், 23, சென்ட்ரிங் தொழிலாளி. புலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி, 35. இவர், கவுதமின் அத்தை நிரோஷா, 30, என்பவரை நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார்.தம்பதிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. கவுதம், கார்த்தி இருவரும் நேற்று முன்தினம் இரவு, மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கார்த்தி, கத்தியால் குத்தியதில் கவுதம் சம்பவ இடத்திலேயே பலியானார். வேப்பங்குப்பம் போலீசார் கார்த்தியை கைது செய்தனர்.சிறுவனுக்கு தொந்தரவு: இளைஞருக்கு சிறை
தேனி மாவட்டம் சாமாண்டிபுரம் உலகமுத்து மகன் விஜய். இவர் 2019 செப்., 20 ல் அப்பகுதியில் உள்ள குளத்தில் ஆடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு தந்தார். கம்பம் தெற்கு போலீசார் விஜயை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பளித்த நீதிபதி கணேசன், குற்றவாளி விஜய்க்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் தவமணிசெல்வி ஆஜரானார்.பேரணியில் பங்கேற்ற மனைவிக்கு வெட்டு
தூத்துக்குடி அல்லிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குணா 35. அவரது மனைவி அமராவதி 28. இரண்டு குழந்தைகள் உள்ளனர். குணா வேலைக்கு செல்லவில்லை. அமராவதி மகளிர் சுய உதவி குழுவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணியில் பங்கேற்று விட்டு டூவீலரில் அமராவதி வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். கோரம்பள்ளம் அருகே அவரை வழிமறித்து கணவர் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். கழுத்து பகுதியில் பலத்த வெட்டினால் உயிருக்கு போராடிய நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமராவதி அனுமதிக்கப்பட்டார். குணாவை போலீசார் தேடி வருகின்றனர்.நக்சல் தாக்குதல்; 3 வீரர்கள் வீரமரணம்
சத்தீஸ்கரில் சுக்மா - பிஜாப்பூர் எல்லையில் அமைந்துள்ள தெஹல்குடேம் பகுதியில் நக்சல் ஒழிப்புப் படையினருடன் மாவட்ட ரிசர்வ் படையினர் மற்றும் சிறப்பு அதிரடி படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல் அமைப்பினர், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.இந்த மோதலில், மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்; 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஹெலிகாப்டர் வாயிலாக மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்திய மாணவர் அமெரிக்காவில் மர்ம சாவு
அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் பர்ட்யு பல்கலையில், நம் நாட்டின் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர், கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் படித்து வந்தார். இந்நிலையில் அந்த மாணவனின் தாயார் கவுரி, தன் மகன் காணவில்லை என அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரகத்திற்கு புகார் அளித்தார். காணாமல் போன மாணவர் குறித்து பல்கலை நிர்வாகம் அளித்த புகாரின்படி போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று பல்கலை அருகே இறந்த நிலையில் ஒரு ஆணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, அந்த உடலில் நீல் ஆச்சார்யாவின் அடையாள அட்டை இருந்ததையும், அவரது உடைமைகள் இருப்பதையும் கண்டறிந்தனர். அதன்பின் பல்கலை நிர்வாகத்தினர் உதவியுடன், இறந்தது அவர் தான் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.