சென்னை:''தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதை கேட்டு பெற முடியாத அரசாக, தமிழக அரசு உள்ளது,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேசினார்.சென்னையில் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி சாதனை. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில், தமிழகம் முதலிடம்.தில்லு திராணியில்லை
இந்தியாவிலேயே மோசமான முதல்வர் பட்டியலில், ஸ்டாலினுக்கு முதலிடம். எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்த அரசாக, தி.மு.க., அரசு உள்ளது. முதல்வர் ஸ்பெயின் சென்றுள்ளார். அங்கு சென்று பெருந்துறையில் உள்ள ஆலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறார்.அதை இங்கே செய்திருக்கலாம். மத்திய அரசு நமக்கு வரும் வருவாயை நிறுத்தி வைத்துள்ளது. அதை கேட்டு பெற முடியாத அரசாக, தி.மு.க., ஆட்சி உள்ளது. மத்திய அரசு வருவாயில் 41 சதவீதத்தை, மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். கடந்த 2021 - 22ல் எட்டு சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படவில்லை.மத்திய அரசிடம் நிதி பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நிதியை கேட்க தில்லு திராணி வேண்டும். இந்த ஆட்சியில் பார்க்க முடியாது.ஆட்சிக்கு வராது
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. பெட்ரோல் , டீசல் விலையை லிட்டருக்கு 15 ரூபாய் விலையை, மத்திய அரசு குறைக்க வேண்டும்.கடந்த முறை ராகுல் தான் பிரதமர் என்றார், ஸ்டாலின். எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்தது. இப்போது, 'இண்டியா' கூட்டணி வலுவாக இருக்கிறது என்றார். ஒவ்வொருவராக கழன்று கொண்டு செல்கின்றனர். ஒருபோதும் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வராது.இவ்வாறு அவர் பேசினார்.